Published:Updated:

`அவங்க சிரிப்புதான் நிம்மதி!’ - புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளுக்கு உதவும் சென்னை நண்பர்கள்

பிரதாப், மகேஷ்
பிரதாப், மகேஷ்

``நாம் தினமும் பார்க்கும் உலகத்தைத் தவிர்த்து இன்னொரு உலகம் இருக்கிறது. சோகமும் வறுமையும், நோயும் வலியும் நிறைந்த உலகம். அந்த உலகத்துக்கு உதவி செய்யும் தானா சேர்ந்த கூட்டம்தான் ஹெல்பிங் ஹேண்ட்ஸ்.”

``ஒருமுறை விசா வேலை தொடர்பாக யு.எஸ் எம்பசி வரை சென்றிருந்தேன். `அவசரமா ஒரு குழந்தைக்கு கீமோதெரஃபி பண்ணியே ஆகணும்’ என எனக்கு மெசேஜ் வந்தது. ரூ. 20,000 தேவையிருந்தது. எங்களுடைய வாட்ஸ் அப் குரூப்பில் மெசேஜ் ஒன்றைப் பதிவிட்டேன். வேலைகள் முடிந்து வெளியே வந்து என்னுடைய வங்கிக் கணக்கைப் பார்த்தேன். ரூ. 32,000 கிடைத்தது. ஒருமணி நேரத்தில் கிடைத்த உதவி இது. நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று உதவி தேவைப்பட்டவர்களுக்கு பணத்தைக் கொடுத்தோம். அன்றைக்கு அந்தக் குழந்தையை எங்களால் காப்பாற்ற முடிந்தது. பெரும்பாலும் புற்றுநோயால் பாதிப்படைந்த குழந்தைகள் பிழைப்பதில்லை. இன்று அந்தக் குழந்தை முடிந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கணும். அவ்வளவுதான் எங்க ஆசை!” - ஆசைகள் எப்போதுமே விநோதமானது. குழந்தைகள் சந்தோஷத்தில் நிறைவு காணும், அதற்காக உழைக்கும் இந்த இளைஞர்கள் யார்? வாங்க தெரிஞ்சுப்போம்!

பிரதாப், மகேஷ்
பிரதாப், மகேஷ்

சென்னையைச் சேர்ந்த பிரதாப்பும் மகேஷும் பள்ளிக்கால நண்பர்கள். கொண்டாட்டமாகவே தங்களது குழந்தைப் பருவத்தைக் கழித்தவர்கள். படிப்புகளை முடித்துவிட்டு பிரதாப் ஐ.டி வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். மகேஷ் தன்னுடைய அப்பா ஆரம்பித்த குழந்தைகள் காப்பகத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். பிரதாப் சம்பாதிக்க தொடங்கியதும் கஷ்டப்படும் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மகேஷிடம் கூறி வந்துள்ளார். ஆரம்பகாலத்தில் மகேஷின் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்து வந்தார். பின்னர், நண்பர்கள் மூலமாகத் தெரியவரும் வேறுசில காப்பகங்களுக்கும் உதவிகளை வழங்கியுள்ளார். முறையாக இந்த உதவிகளைச் செய்ய முடியாததால் அதிருப்தியில் இருந்த பிரதாப்பும் மகேஷும் இணைந்து காப்பகங்களில் இல்லாத ஒரு குழந்தையின் கல்விக்கு தொடர்ந்து உதவி செய்யத்தொடங்கினர்.

நாள்கள் இப்படியே செல்ல... 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதாப்புக்கு மகேஷிடமிருந்து ஒரு அழைப்பு. ``நம்முடைய காப்பகத்தில் படித்து வளர்ந்த ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி பண்றாங்க. அந்தக் குழந்தைகள் சாப்பிடக்கூட வழி இல்லாமல் கஷ்டப்படுறாங்க. கிவி பழங்கள் அவங்களுக்கு அதிகம் தேவைப்படுது. உதவி பண்ண முடியுமா?” என்று மகேஷ் கேட்டுள்ளார். அப்போதுதான், இருவரும் இணைந்து பால்யகால, கல்லூரி நண்பர்களை இணைத்து `ஹெல்பிங்க் ஹேண்ட்ஸ்’ என்ற வாட்ஸ்அப் குரூப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். யாருக்கு என்ன உதவி வேண்டும் என்ற தகவலை வாட்ஸ் அப்பில் பிரதாப் பதிவிடுவார். அதற்கு ஏற்ப அந்தக் குரூப்பில் உள்ள நபர்கள் தேவையான பணத்தை பிரதாப்பின் வங்கிக் கணக்குக்கு அனுப்புவார்கள். உதவி தேவைப்படும் குழந்தைக்கு நேரடியாகச் சென்று பிரதாப்பும் மகேஷும் பணத்தை வழங்குவார்கள்.

`ஹெல்பிங் ஹேண்ட்ஸில்’ இன்று 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 22 லட்ச ரூபாய்க்கும் மேலான பணத்தை வாட்ஸ் அப் வழியாகத் திரட்டி உதவி செய்து வருகின்றனர். ``எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. சாமி கும்பிடுவதைவிட நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு உதவும் போதும், அவங்களுடன் நேரம் செலவழிக்கும்போதும் உணர்றோம்” என்று புன்னகையுடன் நம்முடன் இருவரும் பேசத்தொடங்கினர்.

``கேன்சர் ரொம்ப காஸ்ட்லியான உயிர்கொல்லி நோய். குழந்தைகளின் உணவுக்காக முதலில் உதவிகளைச் செய்யத் தொடங்கினோம். உணவையும் தாண்டி மருந்து, சிகிச்சை, பயணம் என அடிப்படையான தேவைகள் அவர்களுக்கு அதிகமாக இருப்பதை உணர்ந்தோம். ஆரம்பத்தில் ரூ.100, 200 எனக் கிடைத்த பணத்தை வைத்து உதவி செய்தோம். அதை வாங்கும்போது அவங்க முகத்துல ஒரு சந்தோஷம் தெரிஞ்சுது. காசுக்காக அவங்க சந்தோஷப்படல. நமக்கும் உதவி பண்ண யாரோ இருக்காங்க, அப்டீன்ற சந்தோஷம். இந்த சந்தோஷம் எங்கள மோட்டிவேட் பண்ணிச்சு. முதலில் முகம் தெரிந்த மிகவும் குறைவான நபர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தாங்க. உதவிகள் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு, முகம் தெரியாத நிறைய மனிதர்கள் ஹெல்பிங் ஹேண்ட்ஸின் இன்னொரு கையாக உதவ ஆரம்பித்தனர்" என்கிறார் பிரதாப்.

குழந்தைகள்
குழந்தைகள்

மருத்துவமனையில் இருந்தும் உதவிகளைக் கேட்க தொடங்கியதாகத் தொடர்ந்து பேசிய பிரதாப், ``பெட்ஷீட், டயப்பர்ஸ், டிஃபன் பாக்ஸ், ஹெல்த் ட்ரிங்க்ஸ் எனத் தேவையான எல்லாவற்றையும் தொடர்ந்து வாங்கிக் கொடுக்கத் தொடங்கினோம். குழந்தைகளுக்கு பண உதவி செய்வதைவிட சின்ன பொம்மை, பந்து விளையாட வாங்கிட்டுப் போனால் அவ்வளவு சந்தோஷம் முகத்துல தெரியும். அந்த சந்தோஷம் நமக்கு பெரிய வலிய குடுக்கும். வெளியில் சென்று அவர்களால் விளையாட முடியாது. நோய் தருகிற வலி, 24 மணி நேரமும் பெட் என 4 சுவருக்குள்ளேயே அவர்களின் உலகம் அடங்கிவிடும். அவங்ககிட்ட கொடுக்குற பொம்மையை ஊசி குத்தின கையால கஷ்டப்பட்டு வாங்கிப் பாக்கும்போது சில மணித்துளிகள் தங்களுடைய வலியை மறந்து சிரிப்பாங்க. அப்புறம் வலியால திரும்பவும் அழத் தொடங்கிடுவாங்க” கண்ணாடிக்கும் கண்களுக்கும் இடையில் வலி கண்ணீராகக் கண்ணங்களில் வடிவதை துடைத்தபடி பேசுவதைத் தொடர்ந்தார் பிரதாப்.

`பிரதமர் பாராட்டியதை நம்ப முடியல; எதையும் எதிர்பார்த்து உதவி செய்யல!’ - நெகிழும் `சலூன்கடை’ மோகன்

``புற்றுநோயால் பாதிப்படைந்த குழந்தையின் குடும்பமே தனிமைப்படுத்தப்படும். உதவி கேட்கும்போது நேரடியாக வந்து கொடுங்கனு சொல்லுவாங்க. கையைப் பிடித்து அழுவாங்க. அவங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இருக்க மாட்டாங்க. கொஞ்ச நேரம் எங்க குழந்தைங்ககூட பேசுங்கனு சொல்லுவாங்க. எப்படியாவது குழந்தையைக் காப்பாத்த முடியாதானு கதறுவாங்க. ஒருநாள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கிஃப்ட் கொடுத்துக்கிட்டு இருந்தோம். டாக்டர் எங்களிடம் வந்து `சீக்கிரம் கிளம்புங்க. அந்தக் குழந்தை ரொம்ப சீரியஸ்ஸா இருக்கு’ அப்டினு சொன்னாங்க. அவசரமா கிளம்பி வீட்டுக்கு வந்ததும் குழந்தை இறந்திடுச்சுனு தகவல் சொன்னாங்க. டீக்கடை, வீடு என தனியா உட்கார்ந்து நிறைய அழுதேன். கிஃப்ட் குடுக்கும்போது அந்தக் குழந்தை சிரிச்சது, மாமா மச்சினு பேசி விளையாடியது எல்லாமே ஞாபகத்துல வந்து உறைந்து வலியா நின்னுச்சு. இறந்துபோன குழந்தைங்களோட அப்பாம்மா `இதுவரை பண்ண எல்லா உதவிக்கும் நன்றி. இனி உதவி தேவைப்படாதுனு’ சொல்லும்போது மனசு கனமாகி, கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும்” என்று பெருமூச்சு விட்டு இம்முறை கண்ணீரை உள் இழுத்துக்கொண்டார்.

சிறிது நேரம் அமைதிக்குப் பின் மீண்டும் பேசத் தொடங்கினார். ``மித்ரானு ஒரு குழந்தை இருந்துச்சு. கண்ணுல கேன்சர் அந்தக் குழந்தைக்கு. முகநூல் மூலமாகத் தெரிய வந்துது. சிகிச்சைக்கு 4 லட்சம் தெவைப்பட்டது. உடனடியாக ரூ.15,000 திரட்டி கொடுத்தோம். ஒருசில நாள்கள் கழித்து குழந்தையோட அப்பாகிட்ட இருந்து போன் வந்துச்சு. ஒரு ஹாஸ்பிடல்ல ஃப்ரீயா ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்கிட்டாங்க. என் ஃபிரெண்ட்ஸ் எனக்கு 25,000 ரூபாய் கொடுத்தாங்க. எனக்கு டிராவல்க்கு மட்டும் 5,000 ரூபாய் எடுத்துக்கிட்டேன். 20,000 ரூபாய் ஹெல்பிங் ஹேண்ட்ஸ்க்கு குடுக்கிறேன்னு சொன்னாங்க. இந்த மாதிரி பெரிய மனசுயெல்லாம் சான்சே இல்ல. தன்னோட குழந்தையின் வலியை உணர்ந்தவங்களாலதான் இப்படி யோசிக்கவே முடியும். அந்தப் பணத்தை வச்சு இன்னொரு பெரிய ஹெல்ப் பண்ணோம்” என்றார்.

குழந்தைகள்
குழந்தைகள்

கொரோனா வைரஸ் தொடராபான ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து தங்களுடைய பணியை இருவரும் செய்து வருகிறார்கள். ``ஊரடங்கால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் குழந்தைகள் மிகவும் கடுமையாப் பாதிப்படைந்துள்ளனர். மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்கேனிங் உள்ளிட்ட டெஸ்டுகள் எடுக்கத் திணறி வருகிறார்கள். அவர்களின் குடும்பம் இன்னும் கடுமையாகப் பொருளாதார அளவில் பாதிப்படைந்துள்ளது. மருத்து சரியாகக் கிடைக்காததால் அதிகமாகப் பழங்களை வாங்கிக் கொடுத்து வருகிறோம். குடும்பத்தின் செலவுகளுக்கும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். நேரடியாகச் சென்று உதவ முடியாது என்பதால் கிடைக்கும் வழிகளில் எல்லாம் உதவிகளைச் செய்து வருகிறோம். ஊரடங்கால் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் பிறர்க்கும் உதவிகளைச் செய்து வருகிறோம். கிட்டத்தட்ட 800 குடும்பங்களுக்கு இந்த லாக்டௌன் காலத்தில் உதவி செய்திருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

``நாம் தினமும் பார்க்கும் உலகத்தைத் தவிர்த்து இன்னொரு உலகம் இருக்கிறது. சோகமும் வறுமையும், நோயும் வலியும் நிறைந்த உலகம். அந்த உலகத்துக்கு உதவி செய்யும் தானா சேர்ந்த கூட்டம்தான் ஹெல்பிங் ஹேண்ட்ஸ். உதவி பெருசா பண்ணணும்னு அவசியமே இல்ல. நாம சின்னதா நினைக்கிற உதவி இன்னொருவரோட வாழ்க்கையவே காப்பாத்துற அளவுக்கு சக்தியானது. பண்றோமான்றதுதான் முக்கியம். முகம் தெரியாத நபர்கள் என்மீது வைக்கும் நம்பிக்கையும் குதிச்சு ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளின் கஷ்டமும்தான் எங்களை இன்னும் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது” என வேதனை கலந்த குரலில் கூறினர். புற்றுநோயால் பாதிப்படைந்த 500 குழந்தைகளை இதுவரை காப்பாற்றியதோடு அவர்கள் தங்களது கல்வியைத் தொடரவும் தொடர்ந்து இருவரும் உதவி செய்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

கொரோனா: வறுமையை நோக்கி 120 மில்லியன் குழந்தைகள்; எதிர்காலம்? -யுனிசெஃப்
அடுத்த கட்டுரைக்கு