Published:Updated:

`பழைய டயர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு!’ - செங்கல்பட்டு இளைஞரின் முயற்சி

கொரோனா வைரஸ் மாதிரி உருவம்
கொரோனா வைரஸ் மாதிரி உருவம்

லட்சக்கணக்கில் செலவு பண்ணி சமுதாயத்துக்கு என்னென்னவோ உதவிகள் பண்ணிட்டு இருக்காங்க. என்னால காசு பணமெல்லாம் செலவழிக்க முடியாவிட்டாலும் விழிப்புணர்வு கொடுக்க முடியும்.

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் தினமும் ஒன்று, இரண்டு என்ற எண்ணிக்கையில் பரவிய கொரோனா தொற்று கடந்த சில நாள்களாக நூற்றுக்கணக்கில் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு இன்மையும், கொரோனா நமக்கெல்லாம் வராது என்ற எண்ணமுமே கொரோனா சமூகப் பரவலாக மாறும் சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

டயர் உருவங்கள்
டயர் உருவங்கள்

கூடுமான வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும், அறிகுறிகள் இருப்பவர்கள் தானாக வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சுய தனிமைப்படுத்துதல் அவசியம் என ஊடகத்தின் வாயிலாகத் தினமும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு பகுதியில் உள்ள காவல் துறையினரும் மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் செய்து வருகிறார்கள். இத்துடன் ஒரு புது விதமான விழிப்புணர்வு முயற்சியை செய்துள்ளார் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்.

பழைய டயர்களில் ஆள் உயர பொம்மைகள் செய்து விற்பனை செய்து வரும் இவர், டயர்களைப் பயன்படுத்தி கொரோனா வைரஸின் உருவங்கள் செய்து, மாவட்டங்களின் முக்கிய பகுதியில் வைத்திருக்கிறார். இது தொடர்பாக அசோக்குமாரிடம் பேசியபோது, ``திருமண மண்டபங்கள், அப்பார்ட்மென்ட்கள், பூங்காக்களை அலங்கரிக்க என மாதத்துக்கு 10 ஆர்டர்களாவது கிடைத்துவிடும். ஆனால், ஊரடங்குக்குப் பிறகு எந்த ஆர்டரும் இல்லை. குழந்தைகளை வெச்சுகிட்டு சாப்பாட்டுக்கே சிரமமான சூழல்தான்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

நிலைமை சரியாகனும்னா மக்களிடம் கொரோனா பற்றி விழிப்புணர்வு வேணும்னு தோணுச்சு. எங்கள் பகுதியில் உள்ள காவல் துறையினர் தினமும் எவ்வளவோ சொல்லியும் மக்கள் வீட்டுக்குள்ள கட்டுப்பட்டு இருக்கமாட்டேங்கிறாங்க. அதான் புது முயற்சியா, டயர்களைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் உருவம் செய்து விழிப்புணர்வு செய்யலாம்னு முடிவுக்கு வந்தேன். யார் யாரோ லட்சக்கணக்கான காசு செலவு பண்ணி சமுதாயத்துக்கு என்னென்னவோ உதவிகள் பண்ணிட்டு இருக்காங்க. என்னால காசு பணமெல்லாம் செலவழிக்க முடியாவிட்டாலும், வீட்டில் தேக்கி வெச்சுருக்க பொருளைப் பயன்படுத்தி முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு எடுத்த முயற்சிதான் இது.

முதலில் எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்காக, டயரில் செய்த கொரோனா உருவத்தை மக்கள் அனைவரும் கூடும் இடத்தில் வெச்சு காவல்துறையினரின் உதவியோட வீட்டைவிட்டு வெளியே வராதீங்க, மாஸ்க் போடுங்கனு விழிப்புணர்வு கொடுத்தோம். அதைப் பார்த்து மற்ற மாவட்டங்களிலும் கேட்க திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டுனு மொத்தம் 13 பொம்மைகள் செய்து கொடுத்திருக்கிறேன். நிறைய பொம்மைகள் கேட்டதால் பெயின்ட் வாங்க பணம் இல்லாத சூழல். அரசு கொடுத்த 1,000 ரூபாயில என்ன செலவுகளையெல்லாம் பண்றது. அதனால் நகராட்சியிலிருந்து பெயின்ட்க்கு பணம் கொடுத்து உதவுனாங்க. இப்போ மாஸ்க் போட்ட பொம்மைகள், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொம்மைகள் எனப் புதிய முயற்சிகள் எடுக்க ஆரம்பிச்சிருக்கேன்.

சமூக விலகல், கொரோனா விழிப்புணர்வு! -தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்

மக்கள் வாழ்வாதாரத்தைத் தேடித்தான் வெளியே வர்றாங்க. ஒவ்வொருவரும் சொல்ற காரணமும் சூழலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கு. வாழ்வாதாரத்தைத் தேடினாலும்கூட உயிருக்கு ஆபத்தான சூழலை வர வழைச்சுக்கக் கூடாது இல்லையா... பத்திரமா இருங்க மக்களே" என்று அக்கறையுடன் சொல்கிறார் அசோக்.

அடுத்த கட்டுரைக்கு