Published:Updated:

சாத்தான்குளம்: `உழைப்பைத் தவிர வேறெதுவும் தெரியாதுண்ணே!' -உதயநிதியிடம் கலங்கிய சகோதரி

குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன உதயநிதி
குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன உதயநிதி

`உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகச் சொன்ன முதல்வர், அ.தி.மு.க சார்பில் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டிய அவசியமில்லை' என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரிலும் போனிலும் ஆறுதல் கூறி வருகின்றனர். அவர்களின் குடும்பத்துக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதியும் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் ரூ.25 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டு நிதியை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க சார்பிலும் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

உதயநிதி
உதயநிதி

இந்நிலையில், தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளத்தில் அக்குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உதயநிதியைப் பார்த்ததுமே ஜெயராஜின் மனைவி, மகள்கள் கதறி அழுதனர்.

``ஆரம்பத்துல இருந்தே உழைப்பு, உழைப்புன்னு வாழ்ந்தவர் எங்க அப்பா. என்னோட தம்பியும் அதே மாதிரிதான். ஊருக்குள்ள யார்கிட்ட வேணாலும் விசாரிச்சுப் பாருங்கண்ணே.

எங்க அப்பாவும் தம்பியும் வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. ரெண்டு பேருமே அதிர்ந்துகூட பேச மாட்டாங்க. அக்கா, தங்கச்சிகளுக்கு கல்யாணத்தை முடிச்சுக் கொடுத்துட்டுத்தான் எனக்குக் கல்யாணம்னு தம்பி சொல்லிட்டார். போன, டிசம்பர்லதான் மூணாவது தங்கச்சிக்கு கல்யாணத்தை முடிச்சு வச்சான். போன மாசம்தான் தம்பி பென்னிக்ஸுக்கு நிச்சயதார்த்தம் செஞ்சு, அடுத்த மாசம் கல்யாணத்துக்கும் தேதி குறிச்சோம். அதுக்குள்ள தம்பியும் அப்பாவும் எங்களை விட்டுப் போயிட்டாங்க. ஒரு குடும்பத்துக்கு ஆணி வேரே, அப்பாவும் அப்பாவுக்குப் பிறகுமான ஆண் மகனும்தான். இப்போ எங்க வீட்டுல ரெண்டு பேருமே இல்ல.

ஆறுதல் கூறும் உதயநிதி ஸ்டாலின்
ஆறுதல் கூறும் உதயநிதி ஸ்டாலின்

கடையைத் திறந்து வச்சாங்கங்கிற காரணத்துக்காக ஈவு இரக்கமில்லாம அந்த ரெண்டு போலீஸ்காரங்களும் இப்படியா அடிப்பாங்க? எங்க அப்பா, தம்பிக்கு ஏற்பட்ட நிலைமை இனிமேல் எந்தக் குடும்பத்துக்கும் வரக்கூடாது. அதனாலதான், ரெண்டு எஸ்.ஐ-க்கள் மேலயும் இரட்டைக்கொலை வழக்கு பதிவு செய்யணும்னு கோரிக்கை வச்சிருக்கோம். இப்போ கடைசியா நீதிமன்றத்தை மட்டும்தான் நம்பியிருக்கோம்ணே” என்றார் பென்னிக்ஸின் அக்கா பெர்சி.

இதையடுத்து, ஆறுதல் கூறிய உதயநிதி, “ஒரு உயிருக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அது ஈடாகாது. குடும்பத்துல ஒரு சகோதரனா நான் இருப்பேன். இருவரது இறப்புக்கு நீதி கிடைக்க நான் நிச்சயம் உதவி செய்வேன்” என்றார்.

ஜெயராஜின் மனைவி, மகள்கள், உறவினர்கள் இக்கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்து சொல்லச் சொல்ல கண் கலங்கினார் உதயநிதி. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விசாரணை என்ற பெயரில் இரண்டு பேரையும் அழைத்துச் சென்று போலீஸார் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

உதயநிதி
உதயநிதி

அந்தக் குடும்பத்தினர் நடந்தவற்றையெல்லாம் சொல்வதைக் கேட்கும்போது மிகவும் பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது. இருவரது உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே, தந்தை ஜெயராஜ் காய்ச்சலாலும் மகன் பென்னிக்ஸ் நெஞ்சுவலியாலும் உயிரிழந்தனர் என முதல்வர் கூறினார். இருவரது உயிரிழப்புக்கு அ.தி.மு.க அரசுதான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

சாத்தான்குளம்: மிரட்டிய போலீஸ்; 3 மணிநேரம் போராடிய மருத்துவர்! -பதறவைத்த பரிசோதனைச் சீட்டு

முதல்வர் சொன்னதுபோல, இருவரும் உடல்நலக்குறைவால் இயற்கையாகவே உயிரிழந்தனர் என்றால், ஏன் அ.தி.மு.க தானாக முன்வந்து 25 லட்ச ரூபாய் நிதி அறிவித்தது? அப்படியானால் அ.தி.மு.க-வே இந்த அரசின் தவற்றை சுட்டிக்காட்டியுள்ளது என்பதுதான் உண்மை. இருவரது உயிரிழப்பு குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை நடத்திட வலியுறுத்தி தி.மு.க வழக்கு தொடரவும் தயாராக உள்ளது. கோவையிலும் இதுபோன்று சிறுவனிடம் போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டனர். போலீஸார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

உதயநிதி
உதயநிதி

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பில்மகேஷ், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சண்முகையா, மாநில தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஆகியோரும் உதயநிதியுடன் வந்திருந்தனர்.

“இந்தக் கொரோனா பரவல் நேரத்துலயும் சென்னையில இருந்து கார்லயே பயணிச்சு வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போறாருன்னா பெரிய விஷயம்தான்” என வியப்பாகப் பேசிய பாட்டியம்மாவைப் பார்த்து சிரித்தபடியே கிளம்பினார் உதயநிதி.

அடுத்த கட்டுரைக்கு