Published:Updated:

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் மீது பறந்த மர்ம விமானம்! - பணகுடி காவல்நிலையத்தில் புகார்

பி.ஆண்டனிராஜ்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தின் மீது இரு மர்ம விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பணகுடி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இஸ்ரோ மைய நுழைவு வாயில்
இஸ்ரோ மைய நுழைவு வாயில்

ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது. இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட்டுகளின் மூலமாக வெளிநாடுகளின் செயற்கைக்கோள் கூட விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நிலாவுக்கு சந்திராயன்-2 விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்திய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு உதவும் வகையில், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் இன்ஜின் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெற்று வருகின்றன.

மகேந்திரகிரி மலை
மகேந்திரகிரி மலை

இஸ்ரோ மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி ஆய்வுமையத்தில் உள்ள திரவ இயக்க உந்தும வளாகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும், இந்த மையத்தின் மீது ஆள் இல்லாத விமானம் பறப்பது ஹெலிகாப்டர் போன்ற அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டு ஆள் இல்லாத விமானம் பறந்ததாகச் சர்ச்சை எழுந்தது. பின்னர், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி மற்றும் செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் விமானங்கள் பறந்தன.

இந்த நிலையில், நேற்று (26-ம் தேதி நள்ளிரவு 11.51 மணி மற்றும் இன்று அதிகாலை 12.10 மணிக்கு இரு விமானங்கள் மிகவும் தாழ்வாக மகேந்திரகிரி மலையைச் சுற்றியபடி பறந்ததாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இதுபற்றி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ மையத்தின் மீது மர்ம விமானம் பறந்த தகவல் டெல்லியில் உள்ள உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ வளாகத்தின் மீது இருமுறை மர்மமான முறையில் விமானங்கள் பறந்துள்ளன.
காவல்நிலையத்தில் புகார்

உயரதிகாரிகள் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னர் இதுதொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மகேந்திரகிரியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளரான ரவீந்திரன் என்பவர் நெல்லை மாவட்டம் பணகுடி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். பணகுடி போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மீது மர்ம விமானம் பறந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.