Published:Updated:

`வீடுகளுக்கு வெளியே ரூ.20, 50 ரூபாய் நோட்டுகள்!’ - மாதவரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள்

மாதவரம் மாணிக்கம் தெரு
மாதவரம் மாணிக்கம் தெரு

சென்னை மாதவரத்தில் வீடுகளுக்கு வெளியே மர்ம நபர்கள் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவானது மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மே 17ம் தேதி வரை இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் மாநகராட்சியும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டு
வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டு

இந்தநிலையில், சென்னை மாதவரம் பகுதியில் வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாதவரம் பகுதியில் உள்ள மாணிக்கம் தெருவில் உள்ள சில வீடுகளுக்கு வெளியே 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை சிலர் சைக்கிளில் வந்து வீசிச் செல்வதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர், ``சைக்கிளில் வந்த சிலர் வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் சத்தம் போடவும் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். ஒரு வீட்டின் முன் 20 ரூபாய், இன்னொரு வீட்டின் முன் 50 ரூபாய் நோட்டுகளை போட்டவர்கள் ஒருவீட்டில் 100 ரூபாய் தாளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

எதற்காக இப்படி ரூபாய் நோட்டுகளை வீசிச் செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கொரோனாவைப் பரப்ப இப்படி ஒரு வேலையை அவர்கள் செய்கிறார்களா என்று சந்தேகம் எழுகிறது. வீட்டுக்கு வெளியே ரூபாய் நோட்டுகள் கிடந்தால் மக்கள் அதை எடுக்காமல் இருக்க வேண்டும்.

வீடியோ வெளியிட்ட செல்வி
வீடியோ வெளியிட்ட செல்வி

இதுகுறித்து தமிழக அரசும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

`என் குழந்தையைத் தூக்கி 45 நாளாச்சு!' கொரோனா சூழலிலும் மனிதம் பரப்பும் தன்னார்வலர்கள்! 

இதுகுறித்து அப்பகுதிவாசிகளிடம் பேசினோம். ``சைக்கிளில் வந்த நாலைந்துபேர்தான் இதைச் செய்திருக்கிறார்கள். அதைப் பார்த்து மக்கள் சத்தம் போடவும் தப்பியோடியிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் போல் இருந்ததாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். என்ன காரணத்துக்காக அவர்கள் இதைச் செய்தார்கள் என்று தெரியவில்லை’’ என்றனர். மாதவரம் பால்பண்ணைக் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது அந்தப் பகுதி. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் எதுவும் பதிவாகவில்லை என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு