Published:Updated:

`பசி தாங்க முடியல சார்!’ -விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

ஊரடங்கு
ஊரடங்கு

போர்வை, மெத்தை விரிப்பு, பாய் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக வந்து, கொரோனா ஊரடங்கில் சிக்கிக்கொண்ட வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்ல அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதிவரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்துவருவதால், மே 4-ம் தேதியிலிருந்து ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்திலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போர்வை, மெத்தை விரிப்பு, பாய் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்காக விழுப்புரம் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், ஊரடங்கால் உணவுக்கு வழியில்லாததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கொரோனா
கொரோனா

அப்போது, முகக்கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியுடன் சாலையில் அமர்ந்த அவர்கள், கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டதால் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவிக்கும் தங்களை சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி கொடுக்கும்படி அதிகாரிகளிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர். அப்போது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருக்கும்போது எப்படி சொந்த ஊருக்குச் செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பிய அதிகாரிகளிடம், “நாங்க நடந்துகூட போய்க்கிறோம். அனுமதிச் சீட்டு மட்டும் குடுங்க” என்று பதிலளித்தனர். வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதிக் கடிதம் இ-பாஸ் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது என்று தொழிலாளர்களிடம் தெரிவித்த அதிகாரிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி கூறினார்கள்.

பசி தாங்க முடியல சார். இங்க நமக்கு யாரையும் தெரியாது சார். எல்லாமே கஷ்டத்துல இருக்கறதால யாருகிட்டயும் கடனும் கேக்க முடியல.
உ.பி-யைச் சேர்ந்த பாய் வியாபாரி

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து இன்டர்நெட் சென்டர்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில், எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்டனர். அதையடுத்து, அனைத்துத் தொழிலாளர்களின் விவரங்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், தாங்களே விண்ணப்பித்து ஊர் திரும்ப நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். அதையடுத்து, தொழிலாளர்கள் அமைதியாகத் திரும்பினர். அப்போது நம்மிடம் பேசிய உ.பி-யைச் சேர்ந்த பாய் வியாபாரி அக்தர், “ஊருல ஒண்ணும் வேலை இல்லை சார். மூணு வேளை சாப்பாட்டுக்காகத்தான் பொண்டாட்டி, புள்ளைங்கள விட்டுட்டு இங்க வந்து பாய், பெட்ஷீட்லாம் விக்கிறோம். அதுல பெருசா ஒண்ணும் லாபம் கெடைக்காது சார். ஒரு மாசம் இங்கு வந்து வித்துட்டுப் போனா, அடுத்த மாசம் மூணு வேளையும் சாப்பிடலாம் சார். அந்தளவுக்குத்தான் வருமானம் கிடைக்கும்.

விளிம்பில் எஞ்சியிருப்பது பசி மட்டும்தான் - கொரோனா துண்டாடிய வாழ்க்கைகள்!

இப்போது அதுவும் இல்லாம போச்சு. ஒருவேளை சாப்பாடு மட்டும்தான் இங்க குடுக்குறாங்க. சமயத்துல அதுவும் கிடைக்காது. பசி தாங்க முடியல சார். இங்க நமக்கு யாரையும் தெரியாது சார். எல்லாமே கஷ்டத்துல இருக்கறதால யாருகிட்டயும் கடனும் கேக்க முடியல. இப்படியே போச்சுனா எலி, பூனைங்கள சாப்பிடற நிலைமை வந்துடும் சார். பட்டினில செத்தாக்கூட பரவால்ல. நடந்தே போயி புள்ளைங்க முகத்த பார்த்துட்டு செத்துடலாம்னுதான் அனுமதி கேக்கறோம்” என்றார் கண் கலங்கியபடி.

வட மாநிலத் தொழிலாளர்கள்
வட மாநிலத் தொழிலாளர்கள்

அனைவரும் சொந்த ஊருக்கு செல்லும்வரை உணவு ஏற்பாடு செய்வதாக வருவாய்த் துறை அலுவலர்களும், காவல்துறையினரும் வாக்குறுதி கொடுத்ததால், தாங்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு திரும்பிச் சென்றனர் தொழிலாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு