அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவத் தளவாட கப்பல் ஒன்று முதல் முறையாக பழுதுநீக்கும் பணிக்காகச் சென்னை வந்துள்ளது. இந்தக் கப்பலின் பங்கு என்னவென்றால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செயல்படும் அமெரிக்கக் கடற்படை கப்பல்களுக்கு முக்கிய உதவிகளைச் செய்வது!
இதுமட்டுமின்றி அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள், உணவு, கடற்படைத் தளவாடங்கள், உலர் சரக்குகள், உதிரிப் பாகங்கள், அஞ்சல் மற்றும் பிற பொருள்கள் உட்பட அனைத்து பொருள்களையும் கொண்டு செல்வதற்கும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அரசின் சிவில் சர்வீஸ் கடற்படையினரால் இயக்கப்படும் இந்த சார்லஸ் ட்ரூ 41 ஆயிரம் டன் எடை வரையிலான பொருள்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

சார்லஸ் ட்ரூவை ஒரு மிதக்கும் மளிகைக் கடை, எரிவாயு நிலையம், ஹார்டுவேர் கடை மற்றும் தபால் அலுவலகம் என்று அழைக்கின்றனர். 689 ஆடி நீளம் கொண்ட சார்லஸ் ட்ரூ கப்பல் 63 சதவிகிதம் சரக்குகளைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்களையும் எடுத்துச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட சார்லஸ் ட்ரூ கப்பலில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால், சென்னைக்கு அருகே உள்ள காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் எல்&டி துறைமுகத்திற்குப் பழுது நீக்கும் பணிக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சார்லஸ் ட்ரூ கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் ஐ.ஏ.எஸ். இன்று வரவேற்றுள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியக் கடற்படை மற்றும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது கப்பலில் பழுது நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் 10 நாள்களில் பழுது நீக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.