Published:Updated:

கொரோனா: `அமெரிக்கா ரிட்டர்ன்; மொபைல் கரும்பு ஜூஸ் கடை!’- அசத்தும் இளைஞர்

சரவணன்-நிஷாந்தி
சரவணன்-நிஷாந்தி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

`ஜூன் மாதம் கடையைத் தொடங்கினோம். தற்போது நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளார்கள். அமெரிக்க அளவுக்கு வருமானம் இல்லாவிட்டலும், இப்போதைக்கு வாழத் தேவையான அளவு உள்ளது’.

கொரோனா ஊரடங்கால் அமெரிக்கக் கப்பலில் பார்த்த வேலைக்கு திரும்ப செல்ல முடியாத நிலையில், நடமாடும் கரும்பு ஜூஸ் கடயைத் தொடங்கி அசத்தியிருக்கிறார் மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த சரவணன். மேலும், அதை புதுமையாக வெற்றிகரமாக நடத்தி இந்த ஊரடங்கு காலத்தில் முடங்கி விடாமல் மற்றவருக்கு தன்னம்பிக்கை தரும் மனிதராகவும் அவர் காட்சி அளிக்கிறார் .

நிஷாந்தி
நிஷாந்தி
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள அவரது கடையில் கரும்பு ஜூஸ் உட்பட பத்து வகையான பானங்களை சுகாதாரமான முறையில் தயாரித்து சுவையாக வழங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள். தன் மனைவி நிஷாந்தியுடன் இணைந்து வியாபாரம் செய்யும் சரவணனிடம் பேசினோம்.

``சிங்கம்புணரிதான் எனக்கு சொந்த ஊர். திருமணத்துக்குப்பின் மதுரையில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவில் டிஸ்னிவேர்ல்ட் சுற்றுலாக் கப்பலில் பேக்கரராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். கடந்த ஜனவரியில் விடுமுறைக்காக ஊருக்கு வந்தேன். அபோதுதான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. மார்ச் 31-ல் அமெரிக்கா திரும்பிச் செல்ல வேண்டிய நிலையில், நம் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் செல்ல முடியவில்லை.

கரும்பு ஜூஸ் கடை
கரும்பு ஜூஸ் கடை
ஈ.ஜெ.நந்தகுமார்

அமெரிக்காவில் கொரோனாவால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. பல ஊழியர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நான் வேலை பார்த்த நிறுவனமும் என்னையும் திரும்ப அழைத்தால்தான் உண்டு.

Vikatan

ஊரில் சும்மா இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு தெரிந்த பேக்கரி தொழில் செய்ய வேண்டுமென்றால் முதலீடு அதிகம் வேண்டும். அதனால், எங்களுக்குத் தெரிந்தவர் திருச்சியில் வாகனம் மூலம் கரும்பு ஜூஸ் கடை நடத்துவதை அறிந்தோம். அவரிடம் சொல்லி அதேபோன்று வாகனத்தை வடிவமைத்து, ஜூன் மாதம் கடையைத் தொடங்கினோம். தற்போது நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளார்கள். அமெரிக்க அளவுக்கு வருமானம் இல்லாவிட்டலும், இப்போதைக்கு வாழத் தேவையான அளவு உள்ளது. எனக்கு என் மனைவி நிஷாந்தி உதவியாக இருக்கிறார்.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த வாகனத்துக்காக வாங்கிய கடனை அடைத்து வியாபாரத்தை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்த வங்கியில் லோனுக்கு அப்ளை செய்தோம். கொரோனா காலத்தில் தொழில் செய்பவர்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், வங்கி அதிகாரிகளோ வழக்கம்போல் அலட்சியமாக செயல்படுகிறார்கள். என் மனைவி பெயரில் அப்ளை செய்தும் லோன் கிடைக்கவில்லை. லோன் விரைவில் கிடைத்தால் மீண்டும் அமெரிக்கா செல்லத் தேவையில்லை இங்கேயே வியாபரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதே திட்டம்'' என்றார் உற்சாகமாக.

அடுத்த கட்டுரைக்கு