Published:Updated:

`எங்களோட பிரார்த்தனை வீண் போகலை!’ - நெகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமம்

துளசேந்திரபுரம் கிராம மக்கள்
துளசேந்திரபுரம் கிராம மக்கள்

கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, அவருக்கும் துளசேந்திரபுரம் கிராமத்துக்கும் இடையேயான பந்தம் தற்போதுவரை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதால், அவரது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம், பைங்காநாடு, துளசேந்திரபுரம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்துவருகிறார்கள். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகிறார்கள். இதனால் ஊரே உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது.

துளசேந்திரபுரம்
துளசேந்திரபுரம்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்தப் பகுதி மக்கள் மிகுந்த பெருமித கொண்டாட்டத்தில் இருந்துவந்தார்கள். இவரின் தாய்வழித் தாத்தா கோபாலன் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானதால் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அக்ரஹாரத் தெருவில் வாழ்ந்திருக்கிறது, கோபாலனின் குடும்பம். ஆங்கிலேயே ஆட்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய கோபாலன், சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்.

US Election 2020: `அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன்!’ - முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

அவரின் மூத்த மகள் சியாமளா, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்டு ஜெ ஹாரிஸைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்கலின் மகள்தான் கமலா ஹாரிஸ். அரசியல், பொருளாதாரம், சட்டம் எனப் பலதுறைகளில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியா தலைமை வழக்கறிஞர், சென்ட் உறுப்பினர் எனப் படிபடியாக உயர்ந்து, தற்போது அமெரிக்கத் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கமலா ஹாரிஸ் வெற்றிக்காக பூஜை நடத்திய மக்கள்
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக பூஜை நடத்திய மக்கள்

`கமலா ஹாரிஸுக்கும் பைங்காநாடு, துளசேந்திரபுரத்துக்கும் என்ன சம்பந்தம்... பல ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாத்தா இங்கு வாழ்ந்திருக்கிறார். அவர் இங்கிருந்து சென்று நீண்டகாலம் ஆகிவிட்டது. அப்படியிருக்கும்போது கமலா ஹாரிஸின் வெற்றியை ஏன் இந்தப் பகுதி மக்கள் இவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும்...’ எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, அவருக்கும் துளசேந்திரபுரம் கிராமத்துக்கும் இடையேயான பந்தம் தற்போதுவரை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

`இது தொடக்கம்தான்... முடிவு அல்ல!’ - கமலா ஹாரிஸ்; விழாக்கோலம் பூண்ட மன்னார்குடி கிராமம்

இங்குள்ள இவரது குலதெய்வ கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. 2014-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு 5,000 ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார் கமலா ஹாரிஸ். தங்கள் கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டதை மிகவும் பெருமிதமாகக் கருதிய பைங்காநாடு துளசேந்திரபுரம் மக்கள், ஊர் முழுவதும் பல இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைத்துக் கொண்டாடினார்கள்.

கோயில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர்
கோயில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர்

கமலா ஹாரிஸ் வெற்றி பெற இங்கிருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயிலில் ஊர்மக்கள் ஒன்றாகக் கூடி, சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்தினார்கள். வீடுகளின் முன்பு வாழ்த்துக்கோலம் இட்டார்கள்.

இந்தநிலையில்தான் தற்போது கமலா ஹாரிஸின் வெற்றி இந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் இந்தப் பகுதி மக்கள், ``உலக வல்லரசு நாட்டின் துணை அதிபராக எங்க ஊர் பெண் தேந்தெடுக்கப்பட்டிருக்குறதை நினைக்குறப்ப, ரொம்பவே பெருமையா இருக்கு. ஒருங்கிணைந்த தஞ்சை மாட்டத்தைச் சேர்ந்தவங்க, அரசியல் தலைவராக, புகழ்பெற்ற சினிமா நடிகராக வர்றதையே நாங்க ரொம்ப பெருமையா நினைப்போம்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
AP | Andrew Harnik

அதுவும் எங்க கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண், அந்த அமெரிக்காவுக்கே துணை அதிபராக வந்திருக்காங்கன்னா, சாதாரண விஷயமா... எங்களோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எங்க ஊர் மக்களோட பிரார்த்தனை வீண் போகலை. கமலா ஹாரிஸ் வெற்றிக்கொடி நாட்டிட்டாங்க.’’ ஊர் முழுவதும் ஒருசேர நெகிழ்ச்சியும் உற்சாகமும் வியாபித்திருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு