Published:Updated:

மனநலம் பாதித்த பெண்களுக்கு அடைக்கலம்; மனிதாபிமான செயலில் ஊத்தங்கரை போலீஸ்!

போலீஸாரால் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்
போலீஸாரால் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்கு அடைக்கலம் ஏற்படுத்தித் தரும் ஊத்தங்கரை போலீஸாரின் மனிதாபிமான செயலைப் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் இரவும், பகலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினரின் சேவை பாராட்டுக்குரியது. பாதுகாப்புப் பணியின்போது, காவல்துறையினர் செய்த சில நற்காரியங்களும் உண்டு.

ஊத்தங்கரை
ஊத்தங்கரை

அந்த வகையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்கு அடைக்கலம் ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரைப் போலீஸார். உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில், சாலையோரமும், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களிலும் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை, ஊத்தங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான காவலர்கள் மீட்டு குளிக்க வைத்து சுத்தம் செய்கிறார்கள்.

முடித்திருத்தம் செய்து, அவர்கள் அணிந்திருக்கும் கிழிந்த ஆடைகளையும் அகற்றிவிட்டு புத்தாடைகளை அணிவித்துவிடுகிறார்கள். பின்னர், விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்துக்குக் கொண்டுச் சென்று சேர்க்கிறார்கள். அந்த ஆசிரமத்தில், அவர்களைப் பராமரித்துக்கொள்ளும் முறையையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். நேற்று, அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை மீட்டு ஆசிரமத்தில் சேர்த்துள்ளனர்.

போலீஸாரால் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்
போலீஸாரால் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்
Vikatan

ஊத்தங்கரை போலீஸாரின் இந்த மனிதாபிமான செயல், அங்கு பொறுப்பேற்றிருக்கும் பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமியின் முயற்சி. இவர், ஏற்கெனவே தருமபுரி, நாமக்கல் போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் புணிபுரிந்தபோதும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு பாதுகாப்பதில் அதீத கவனம் செலுத்தியுள்ளார். ஊத்தங்கரையிலும் அவரது மனிதாபிமான சேவை தொடர்வதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு