கண்ணிருந்தும் பார்வை அற்ற நிலையைப்போல இலவச பஸ்பாஸ் இருந்தும் நேரத்துக்கு பஸ் வசதி இன்றி கிலோமீட்டர் கணக்கில் நடந்தே செல்கின்றனர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்குச் செல்ல சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாணவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் பேருந்து மூலம் பள்ளிக்கு வருபவர்களே அதிகம். பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. ஓரிரு தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதுவும், சேலம் டு சென்னை வழித்தடம் என்பதால் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

அரசுப் பேருந்தும் இல்லை, தனியார் பேருந்தில் செல்லலாம் என்றால் அதிலும் கூட்ட நெரிசல். வேறு வழியின்றி படிக்கட்டில் தொங்கியவாறும் தனியார் பேருந்தில் செல்ல வசதி இல்லாதவர்கள் நடந்தும் செல்கின்றனர். வெகு தூரம் செல்ல வேண்டிய மாணவர்கள் அடுத்த பேருந்தை எதிர்பார்த்து மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

"நா இந்த ஸ்கூல்ல 6 வருஷமா படிச்சிட்டு இருக்கேன். அப்போ இருந்து இப்போ வரைக்கும் பிரைவேட் பஸ்லையும் நடந்தும்தான் போயிட்டு இருக்கேன். 'ஃப்ரீ பஸ் பாஸ் இருக்கு. ஆனா, பஸ் இல்ல!'. ஆரம்பத்துல கஷ்டமாகத்தான் இருந்துச்சு. ஒரு கட்டத்துல என் அப்பா ஸ்கூலுக்குப் போக வேண்டாம்னு கூடச் சொல்லிட்டார். வேற வழி இல்ல படிச்சி ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் அதனால பழக்கப் படுத்திக்கிட்டேன்" என்ற மாணவன் ஒருவனின் வார்த்தைகள் நம்மை கலங்க வைத்தன.
சக மாணவர்களுடன் பேருந்துக்காகக் காத்திருந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, '' ஊத்தங்கரை, திருப்பத்தூர் போன்ற வெளியூரைச் சேர்ந்தவர்கள்தான் இங்கே ஆசிரியர்களாகப் பணிபுரிகிறோம். எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இரு சக்கர வாகனத்திலும் அரசு விரைவுப் பேருந்துகளிலும் வந்துவிடுவோம். மாணவர்கள்தான் பாவம். தனியார் பேருந்தில் பணம் கொடுத்தும் கூட்ட நெரிசலில் படியில் தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறார்கள். சில மாணவர்கள் நடந்தே பல கி.மீ செல்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக 100% தேர்ச்சி என்பதால் இந்தப் பள்ளியின் கல்வித்தரத்தை நம்பி இந்த ஆண்டு கூடுதலாக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்டோர் இங்கு சேர்ந்துள்ளனர்.
சரியான நேரத்தில் பேருந்து வசதி கிடைக்காததால், சிறு வயது மாணவர்களையும் பெண் குழந்தைகளையும் பெரிதும் பாதிக்கிறது. பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும் வாய்ப்பும் உள்ளது. சமூகத்தில் நம் கண்முன்னே நடைபெறும் அசம்பாவிதங்களால் பெண் குழந்தைகளின் பெற்றோர் பெரிதும் பயப்படுகின்றனர். இந்தச் செய்தியின் மூலமாக மாணவர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு அரசுப் பேருந்தைப் பள்ளி முடியும் நேரங்களில் இயக்க ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்" என்றார்.
இதுதொடர்பாக ஊத்தங்கரை அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போ மேலாளர் அழகரிடம் பேசினோம். அவர், " ஊத்தங்கரை டு திருப்பத்தூருக்கு ஒரு பேருந்துதான் இயக்கப்படுகிறது. காலை 8.30 மணி, மதியம் ஒரு சிங்கிள் மற்றும் திருப்பத்தூரிலிருந்து 4.40 மணிக்கு இறுதி நடை அவ்வளவுதான் வேறு எதுவும் சொல்வதற்கில்லை" என முடித்துக்கொண்டார்.

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, உடை, உணவு, பஸ் பாஸ் என வழங்கிய தமிழக அரசு பேருந்தை தேவையான நேரத்தில் இயக்கத் தவறியுள்ளது என்பதே நிதர்சனம். கிராமப்புற ஏழை மாணவர்களுக்காகப் பள்ளி முடியும் நேரங்களில் பேருந்தை இயக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு.