Published:Updated:

கிராம மக்களின் வன தேவன்..! -வாச்சாத்தி தலைவர் பெருமாள் மறைவால் கலங்கும் பழங்குடிகள்

வாச்சாத்தி
வாச்சாத்தி ( எம். விஜயகுமார் )

1992 ஜூன் மாதம் 20-ம் தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் வயது வந்த 18 பழங்குடிப் பெண்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று பட்டப் பகலில் பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

தலைவர் என்பவர் அரசியல்வாதியாகவோ, பல லட்சம் மக்களால் அறியப்பட்டவராகவோ இருப்பவர் மட்டும் அல்ல, தன்னை நம்பி இருக்கும் மக்களுக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் வாழ்பவனே தலைவன். அப்படி சாமானிய மக்களுக்குள் தலை சிறந்த தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் வாச்சாத்தி ஆதிவாசி மக்களின் ஊர்த் தலைவர் பெருமாள்.

பெருமாள்
பெருமாள்

தமிழக மக்கள் வாச்சாத்தி சம்பவத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து கடந்து போய்விட முடியாது. 1992 ஜூன் மாதம் 20-ம் தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் வயது வந்த 18 பழங்குடிப் பெண்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று பட்டப் பகலில் பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்தக் கொடூரத்தைக் கண்டித்துத் தொடர்ந்து போராடியும், இவ்வழக்கின் முதல் சாட்சியாகவும் இருந்தவர் ஊர்த் தலைவர் பெருமாள். பின் நாளில் அவரை வழக்கிலிருந்து பின்வாங்கச் சொல்லி வனத்துறையினர் பல முறை பல லட்சம் தருவதாக பேரம் பேசியும் அடிபணியவில்லை. இறுதிவரை தன்னுடைய மக்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்து வழக்கை வெற்றி பெறச் செய்தார். இவர் கடந்த 18-ம் தேதி வயது முதிர்ச்சி காரணமாக மரணமடைந்தார். வாச்சாத்தி மக்கள் பெருமாளை வனத் தேவனாகவே போற்றுகிறார்கள்.

பெருமாள் வீடு
பெருமாள் வீடு

முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டில்லி பாபு, ``வாச்சாத்தி கிராமத்தையொட்டி உள்ள சித்தேறி மலையில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டுப் பதுக்கல் போட்டிருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து வனத்துறையினர் சித்தேறி மலைக்கு வந்து அங்கிருப்பவர்களைத் தாக்கினார்கள். அதில் பெருமாளையும் தாக்கினார்கள்.

இச்சம்பவம் வாச்சாத்தி கிராமத்தில் ஊர்த் தலைவர் பெருமாளை வனத்துறையினர் தாக்கியதாகத் தகவல் காட்டுத் தீ போலப் பரவியது. அதையடுத்து, வாச்சாத்தி மக்கள் ஒன்று திரண்டு வனத்துறையினரைச் சுற்றி வளைத்துத் தாக்கினார்கள். இதில் தப்பித்துப் போனவர்கள் வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்கள். அதையடுத்து வனத்துறை, காவல்துறை என 269 பேர் வாச்சாத்திக்குள் நுழைந்தனர்.

கண்ணில் கண்டதையெல்லாம் அடித்து துவம்ஷம் செய்தனர். வீட்டுக்குள் இருந்த பொருள்களை வெளியே போட்டு தீ வைத்துக் கொளுத்தினார்கள். ஆடு, மாடு போன்ற கால்நடைகளைக் கொன்று குடிநீர் கிணற்றில் வீசினார்கள். இவர்களுக்குப் பயந்து ஆண்கள் ஊரை விட்டு வெளியே தலைமறைவானார்கள். பெண்கள், குழந்தைகள், வயதானவர்களைக் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்தனர்.

டில்லி பாபு
டில்லி பாபு

இதில் வயதுக்கு வந்த 18 பெண்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று ஏரிக்கரையில் பட்டப் பகலில் பாலியல் வன்கொடுமை செய்தனர். பிறகு பெருமாள் மற்றொருவர் என 2 ஆண்கள், 103 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கு பல வருடமாக நடந்தது. பெருமாள் இவ்வழக்கின் முதல் சாட்சியாக இருந்தார்.

பெருமாள் வழக்கிலிருந்து பின்வாங்கினால் வழக்கு முடிந்துவிடும். அதனால் பெருமாளை வனத்துறையினர் பல முறை சந்தித்து பல லட்சம் தருவதாக ஆசை காட்டினர். அப்போதைய தர்மபுரி கலெக்டர் தசரதனும் பெருமாளிடம் பேரம் பேசினார். ஆனால், பெருமாள் தன் மக்களுக்கு நியாயம் கிடைக்க கம்யூனிஸ்ட் தோழர்களோடு கரம்கோத்து நேர்மையான வழியில் செயல்பட்டு வழக்கை வெற்றி பெறச் செய்தார். உண்மையிலேயே அந்த ஆதிவாசி மக்களுக்குக் கிடைத்த நேர்மையான தலைவர் பெருமாள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு