Published:Updated:

ஊமைத்துரை ஒளிந்த அந்தக் கோட்டை!- சுவாரஸ்யத்தைத் தூண்டும் வடகரை ஜமீன் வரலாறு #MyVikatan

 ஜமீன் அரண்மனை
ஜமீன் அரண்மனை

வயதான அடர் மரங்கள் சூழ்ந்த, கும்பக்கரை அருவியிலிருந்து வரும் காட்டாறு சூழ்ந்த அற்புதமான இடம் அது.

'வேள்பாரி'யை முடித்த அடுத்த கணமே மனம் தன்னிச்சையாக 'காவல்கோட்ட'த்தைத் தேடியது. காட்டாற்று வெள்ளம், காலம் காலமாக மறைந்திருந்த பொக்கிஷங்களை வெளிக்கொணர்வது போல், வேள்பாரி, காவல்கோட்டத்தை மீட்டெடுத்தது!

 ஜமீன் அரண்மனை
ஜமீன் அரண்மனை

வேள்பாரியின் தாக்கத்தால் இயற்கை விவசாயம் செய்வதற்காக ஒரு சிறிய மாந்தோட்டத்தை கொடைக்கானல் அடிவாரத்தில் வாங்கி, செப்பனிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த வேலையில் மும்முரமாக இருக்கும்போதுதான், எங்கள் காட்டில் நாங்களறியாத அந்தத் தகவலும் வந்துசேர்ந்தது. எங்கள் தோட்டத்திலிருந்து, கூப்பிடும் தூரத்தில் இருக்கும் ஒரு சிதைந்த கோட்டை இருக்கும் ஆச்சர்ய செய்திதான் அது. வியப்போடும் ஆவலோடும் கோட்டைக்கு ஓட, முற்றிலும் சிதைந்து, புதர் மண்டியிருந்தாலும், கோட்டை ஏற்படுத்திய வியப்பும் கேள்விகளும் நிறைய! அழைத்துச்சென்ற நண்பரை விசாரித்ததில்... வெள்ளைக்காரன் காலத்தில், ஊமைத்துரை கயத்தாறில் இருந்து வந்து ஒளிந்த கோட்டை என்றார். எங்கள் ஊருக்கு (பெரியகுளம்) ஊமைத்துரை வந்ததாக எந்த ஒரு தரவும் இல்லை. கோட்டையின் அருகே, மாசி நாயக்கன் கோயில் என்று ஒரு பழைமையான இடமும் உள்ளது. வயதான அடர் மரங்கள் சூழ்ந்த கும்பக்கரை அருவியிலிருந்து வரும் காட்டாறு சூழ்ந்த அற்புதமான இடம் அது. நம் ஆசானின் காவல்கோட்டத்தில் பெரியகுளம் (வடகரை) ஜமீன்தார் பற்றி பல இடங்களில் வருவதால், இந்தக் கோட்டையைப் பற்றிய முழுமையான தகவல் பெரியகுளம் ஜமீன் அரண்மனையில் ஒளிந்திருப்பது எங்களுக்கு தெளிவாகப் புரிந்தது. தொடங்கியது பயணம், அரண்மனை நோக்கி!

அரண்மனைக்குச் சென்று, உடனே உள்ளே செல்ல தயங்கி, அரண்மனையைச் சுற்றியிருக்கும் வயதான பெரியவர்களை விசாரித்ததில், அவர்களும் அதே ஊமைத்துரை கதையையே சொன்னார்கள். நம்ப முடியாமல், அரண்மனையில் அனுமதி கேட்க, தென் தமிழகத்தின் 72 பாளையபட்டுகளில், இன்றும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரேயொரு ஜமீன் ராணி வசந்தகுமாரியுடன், அருமையான ஒரு சந்திப்பு வாய்த்தது. கூடவே, பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்களும். 85 வயதிலும் சுறுசுறுப்பாக, ஹார்லிக்ஸ் கலந்துகொடுத்து வரவேற்றார்.

ஜமீன் ராணி வசந்தகுமாரி
ஜமீன் ராணி வசந்தகுமாரி

கி.பி1484-ல் இருந்து தொடங்குகிறது பெரியகுளம் ஜமீன் வரலாறு. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் முக்கிய படைத் தளபதியான கொட்டிய நாகம்ம நாயக்கரின் வலதுகரமாக இருந்தவர்தான், வடகரையின் (பெரியகுளம்) முதல் ஜமீன்தாரான ராமபத்ர நாயக்கர். மதுரையின் முதல் நாயக்க வம்ச அரசரான விஸ்வநாத நாயக்கரின் தந்தைதான், இந்த கொட்டிய நாகம்ம நாயக்கர். ஒரு படைத்தளபதியின் மகனுக்குப் பேரரசர் கிருஷ்ண தேவராயரே, மதுரையின் அரசனாக முடி சூட்டியது, வரலாற்றில் ஓர் ஆச்சர்ய, அபூர்வ நிகழ்வு! இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்தான், பெரிய குளம் ஜமீன்தார் ராமபத்ர நாயக்கர். இதோ அந்த வரலாறு!

மதுரை, தஞ்சாவூரை உள்ளடிக்கிய தென் தமிழகம் முழுவதுமே விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிறகு, இப்பகுதியை நிர்வகிக்கவும் வரி வசூலிக்கவும், கிருஷ்ண தேவராயரால் நியமிக்கப்பட்டவர்தான் கொட்டிய நாகம்ம நாயக்கர். மதுரையின் கடைசி பாண்டிய இளவரசன் சந்திரசேகர பாண்டியனின் ராஜ தந்திரத்தால், கிருஷ்ண தேவராயருக்கும் நாகம நாயக்கருக்கும் கருத்து வேறுபாடு வர, மதுரையை விஜயநகரப் பேரரசிலிருந்து விடுவித்து, சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்து, மதுரையின் மன்னராகத் தானே முடி சூட்டிக் கொண்டார், நாகம நாயக்கர்.

சினம்கொண்ட கிருஷ்ண தேவராயர், மதுரையை மீட்கவும் நாகம நாயக்கரை சிறைப்பிடிக்கவும், தனது முக்கியத் தளபதிகளை அனுப்ப, விஜய நகரப் பேரரசின் மகா தளபதியான நாகம நாயக்கரை எதிர்கொள்ள, மற்ற தளபதிகள் தயங்கி நிற்க, நாகம நாயக்கரின் ஒரே மகன், மதுரையின் முதல் நாயக்க மன்னனான விசுவநாத நாயக்கன், தனது விசுவாசத்தையும் வீரத்தையும் நிரூபிக்க மதுரைக்குக் கிளம்பினான். இங்கு ஒரு இடைச்செருகல்... இந்தக் கதை தெலுங்கில், `விசுவநாத நாயக்குடு' என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டு, நாகம நாயக்கராக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், விசுவநாத நாயக்கராக சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவும் (நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை), கிருஷ்ண தேவராயராக கிருஷ்ணம்ராஜுவும் (நடிகர் பிரபாஸின் பெரியப்பா) நடித்து, பெரும் வெற்றிபெற்றது. நம் நடிகர் திலகம், வழக்கம்போல சிம்ம கர்ஜனை செய்திருப்பார்.

திருப்பதி வாசகன்
திருப்பதி வாசகன்

மதுரையை முற்றுகையிட விசுவநாத நாயக்கன், தன் தந்தை நாகம நாயக்கரை போருக்கு அழைக்க, எதார்த்த சூழலை உணர்ந்த நாகம நாயக்கரின் தளபதி ராமபத்ர நாயக்கர், நாகம்மரை, விசுவநாதனிடம் சரணடைந்து விடுமாறு ஆலோசனை கூறுகிறார். ராம பத்திரரின் ஆலோசனைப்படியே, நாகம்மர் சரணடைய, பெரும் யுத்தம் தவிர்க்கப்பட்டு, நாகம்மர் கைதுசெய்யப்பட்டு, விஜயநகரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார். தந்தையென்றும் பாராது, நாகம்மரை கைது செய்து மதுரையை விடுவித்ததால், விசுவநாதனின் விஸ்வாசத்தை மெச்சி, மதுரையின் அரசனாக விசுவநாத நாயக்கனுக்கே முடி சூட்டுகிறார், பேரரசர் கிருஷ்ண தேவராயர். இந்த நிகழ்ச்சியில், நாகம்மரை சரணடைய வைத்ததில் ராமபத்ர நாயக்கரின் பங்கு மிக முக்கியமாதலால், விஜயநகரப் பேரரசின் தலைமை அமைச்சரான, நம் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த அரியநாத முதலியாரால் 72 பாளையபட்டுகள் (ஜமீன்கள்) தென் தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டபோது, விசுவநாத நாயக்கரால், வடகரை (பெரியகுளம்) ஜமீன்தாராக நியமிக்கப்பட்டவர்தான், ராமபத்ர நாயக்கர், பெரியகுளத்தின் முதல் ஜமீன்தார்! மிகச் சரியாக 500 வருட வரலாறு. காவல்கோட்டத்தில் படித்துப் பிரமித்த வரலாற்றை, சம்பந்தப்பட்ட ஜமீன் ராணியின் வாயிலாகவே கேட்கக் கேட்க பிரமிப்பு கூடிக்கொண்டேபோகிறது.

இங்கு பக்கங்களும் கூடிக்கொண்டே போவதால், சிதைந்த கோட்டையையும் மாசி நாயக்கன் கோயிலையும், அரண்மனை சுரங்கத்தையும், கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டம்டம் பாறை பற்றிய வரலாறும் அடுத்த பதிவில்!

-திருப்பதி வாசகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க...

https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு