Published:Updated:

ஓமனில் உயிரிழந்த தமிழர்; உடலைக் கொண்டுவர முடியாமல் தவித்த உறவினர்கள்! -உதவிக்கரம் நீட்டிய வைகோ

உயிரிழந்த சாமுவேல் இளங்கோவன்
உயிரிழந்த சாமுவேல் இளங்கோவன்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், பணிக்காக ஓமன் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அங்கேயே உயிரிழந்தார். அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர வைகோ முயற்சி மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர், சாமுவேல் இளங்கோவன். ஏழ்மையான  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஓமன் நாட்டில் வேலை செய்து வந்தார். 

ஓமன் நாட்டின் ஒரு பகுதி
ஓமன் நாட்டின் ஒரு பகுதி

கடந்த 17 வருடங்களாக சாமுவேல், ஓமன் நாட்டில் வேலை செய்து வந்தார். கடைசியாக அங்குள்ள வாட்டர் பிளான்டில் பணியாற்றியபோது அவருடைய கிட்னி செயல் இழந்தது. அதனால் நிர்வாகத்தின் செலவில் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் சாமுவேல், கடந்த மே 11-ம் தேதி ஓமன் நாட்டின் சலாலா என்ற நகரத்தில் உயிரிழந்தார். அங்கிருந்து அவரது உடலைக் கொண்டுவருவதில் சிரமம் இருந்தது. அதனால் இது குறித்து மறைந்த சாமுவேலின் மருமகன் மணிகண்டன் என்பவர் தென்காசி மாவட்ட ம.தி.மு.க செயலாளரான தி.மு.ராசேந்திரனிடம் வைகோவின் கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். 

`சிறந்த வழிகாட்டி; அன்பாக இருந்தவர்!’- கொரோனாவால் குழந்தை பிறந்து 2 நாள்களில் உயிரிழந்த நர்ஸ்

அதன்படி, சாமுவேல் இளங்கோவன், ஓமன் நாட்டில் உயிரிழந்தது பற்றியும் அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்தும் வைகோவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரும் ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வைகோ, இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அவருக்கு மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்து உடனடியாக உதவுமாறு கோரிக்கை விடுத்தார். 

வைகோ
வைகோ

அத்துடன், ஓமனில் உள்ள ம.தி.மு.க ஆதரவாளர்களையும் தொடர்புகொண்டு சாமுவேல் இளங்கோவன் உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் வைகோ ஆறுதல் தெரிவித்தார்.

வைகோ மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, சாமுவேல் இளங்கோவன் உடல் இன்று (20-ம் தேதி) சலாலா நகரிலிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. உறவினர்கள் உடலைப் பெறுவதற்காக கோழிக்கோடு சென்றுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த வைகோவுக்கு உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு