Published:Updated:

தஞ்சை: `திருடுபோன முதல் தமிழ் அச்சு நூல்!’ - ஜெர்மனியிலிருந்து மீட்க வலியுறுத்தும் வைகோ

சரஸ்வதி மகால் நூலகம்
News
சரஸ்வதி மகால் நூலகம்

தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட முதல் அச்சு நூல் வேத ஆகமம், இந்த நூலகத்தின் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருருந்தது. அது திருடுபோய்விட்டது. அந்த நூல், இப்போது, ஜெர்மனி நாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

உலக அளவில் புகழ்பெற்ற, மிகவும் பழைமையான நூலகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சாவூரிலுள்ள சரஸ்வதி மகால் நூலகம். இங்கு கடந்த பல நூறு ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளும், மிகவும் அரிதான நூல்களும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அறிவுக்களஞ்சியமாக விளங்கும் இந்த நூலகத்திலிருந்து பல அறிவுப் பொக்கிஷங்கள் காணாமல்போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். நிர்வாகச் சீர்கேட்டாலும் இந்த நூலகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவருவதாக பலரும் ஆதங்கம் தெரிவித்துவருகிறார்கள்.

இங்கு நிலவிவரும் சர்ச்சைகள் குறித்து ஜூனியர் விகடனிலும், விகடன் இணையத்திலும் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டுவந்தோம். இந்தநிலையில்தான் `இங்கிருந்து காணாமல்போன முதல் தமிழ் அச்சு நூலை ஜெர்மனியிலிருந்து மீட்டுக்கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியிருக்கிரார்.

``சோழர்கள் காலத்தில் கோயில்களிலிருந்த ஓலைச்சுவடிகள், 1535 முதல் 1675 வரை தஞ்சையை ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்களால் சேகரிக்கப் பெற்ற தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருத ஏட்டுச் சுவடி நூல்கள் ஆகியவை தஞ்சை அரண்மனையில் `சரஸ்வதி பண்டாரகம்’ என்ற நூலகம் அமைக்கப்பெற்றுப் பாதுகாக்கப்பட்டன. 1675 முதல் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், பல அரிய ஓலைச்சுவடிகளும், நூல்களும் சேகரிக்கப் பெற்று, சரஸ்வதி மகால் நூலகமாகப் பெயர் பெற்று அங்கே பாதுகாக்கப்பட்டன.

வைகோ
வைகோ

1916-ம் ஆண்டு, தஞ்சை மாவட்ட ஆங்கிலேயே நீதிபதி ஒருவரின் முயற்சியால், அந்த நூலகம் அரசுடைமை ஆக்கப்பெற்றது. நடுவண் அரசு, மாநில அரசு ஆகியவற்றின் நிதி உதவியோடு, இதை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பராமரித்துவருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே, நூலகத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துவருகிறார். பல்வேறு துறைகள் சார்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே இருக்கின்றன. குறிப்பாக, சித்த வைத்தியம் சார்ந்த ஓலைச்சுவடிகள் இங்குதான் பெருமளவில் உள்ளன. தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டுத் துறைகளின் அறிவுப் பெட்டகமாக இந்த நூலகம் திகழ்கிறது. கடந்த நூற்றாண்டில், தமிழ் அறிஞர்களின் மேற்பார்வையில் நூலகம் திறம்பட இயங்கிவந்தது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக, மேலாண்மை இயக்குநர், மேலாண்மை அலுவலர்கள் இல்லை. அந்தப் பொறுப்புகளுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும், பல ஆண்டுகளாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால், நூலகம் சீரழிந்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட முதல் அச்சு நூல் வேத ஆகமம், இந்த நூலகத்தின் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அது திருடுபோய்விட்டது. அந்த நூல், இப்போது, ஜெர்மனி நாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கிறது. நூலகப் பொறுப்பாளர்கள், பெருந்தொகைக்கு அந்தப் புத்தகத்தை விற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், திருடுபோன நாளில், இந்த நூலகத்துக்கு வந்த ஜெர்மானியர்கள் திருடிச் சென்றதாகப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த விசாரணை முழுமை பெறவில்லை. ஜெர்மனியிலிருந்து அந்தப் புத்தகத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. பன்னாட்டுச் சந்தையில், அதன் ஏல மதிப்பு பல கோடி ரூபாய்கள். அது போன்ற அரிய பல நூல்களும் திருடுபோயிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சரசுவதி மகால்
சரசுவதி மகால்

ஆங்கிலேயே அரசு காலத்தில், பர்னல் என்பவரால் ஆக்கப்பெற்ற நூல் பட்டியல் ஆவணம் இருக்கிறது. அதை ஒப்பிட்டுக் கணக்கெடுத்துப் பார்த்தால், திருடுபோன நூல்களின் விவரத்தை எளிதில் அறியலாம். தவறான பைண்டிங் முறையாலும், கறையான்களாலும் அழிந்துபோன நூல்களை, மன்னரின் சேகரிப்புத் தொகுப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார். அது குறித்து, அறிஞர்கள் குழுதான் முடிவு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்னர், 65 ஊழியர்கள் இங்கே பணிபுரிந்துவந்தனர். இப்போது, 10 ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

ஓலைச்சுவடிகளை, நூல்களாக அச்சிடும் பணி முறையாக நடைபெறவில்லை. தடைப்பட்டு நிற்கிறது. அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். திருடுபோன பழந்தமிழ் நூல்களை மீட்க வேண்டும்; நூலகத்தைத் தரம் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் அறிவுச் சொத்துகளுள் ஒன்றான தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தைப் பாதுகாப்பதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நூலகம் இன்னும் பல தலைமுறைகளுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய அறிவுப் பொக்கிஷம். இதை அழிவிலிருந்து காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.