Published:Updated:

`குறைசொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்!' - சுர்ஜித்துக்காகப் பிரார்த்திக்கும் வைரமுத்து

தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சுர்ஜித் மீட்கப்படவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வைரமுத்து
வைரமுத்து

தமிழகம் முழுக்க தற்போது ஒரே குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது, `சுர்ஜித் மீண்டு வரவேண்டும்’ என்பதே. இரவு பகலாக 60 மணிநேரத்தைக்கடந்து மீட்பு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, உள்ளிட்ட துறைகள் களத்தில் சுர்ஜித்துக்காக கைகோத்துள்ளன. 2வது ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி வேகமெடுத்துள்ளது. அமைச்சர்களும் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று இரவு நடுக்காட்டுப்பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு நடத்தினார்.

ஜோதிமணி
ஜோதிமணி

கரூர் எம்.பி ஜோதிமணி, சுர்ஜித் குடும்பத்துடன் அவர்களுக்கு ஆறுதலாக இருந்துவருகிறார். பக்கவாட்டில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சிகள் கைகொடுக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏறக்குறையை 40 அடிவரை குழித்தோண்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் இந்த மீட்பு பணிகள் குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் வேளையில் தமிழகத்தில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டுள்ள குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட்டு விரைவில் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து
வைரமுத்து

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``அரசு எந்திரத்தையோ..ஆழ்துளை எந்திரத்தையோ, குறை சொல்லும் நேரமில்லை;குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர்,``குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.