Published:Updated:

`இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்!' - சுர்ஜித்துக்கு வைரமுத்து அஞ்சலி

கவிஞர் வைரமுத்து சிறுவன் சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நான்கு நாள்களாக நடந்து வந்தது. இந்த நிலையில், குழந்தை சுர்ஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுர்ஜித்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

சுர்ஜித்
சுர்ஜித்

மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து சுஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. சுர்ஜித்தின் உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களின் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!'  குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது? #LiveUpdate

கவிஞர் வைரமுத்து சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில்,

``அதோ

ஒருத்தியின் கண்ணில்

உலகத்தின் கண்ணீர்,

வந்த மழையும்

இனி எந்த மழையும்

அந்தத் தாயின் கண்ணீர் கறையைக்

கழுவ இயலுமா

அடே சுர்ஜித்

இத்தனை பேர் அழுத கண்ணீரில்

நீ மிதந்து மிதந்து

மேலெழும்பி இருக்கலாம்

ஆனால்

அழுத கண்ணீரெல்லாம்

உன்னை அழுகவைத்து விட்டதே

உன்னை மீட்க

கையில் கயிறு கட்டிப்பார்த்தோம்,

ஆனால்

உன் கால் விரலில்

கயிறு கட்டிவிட்டதே மரணம்

சுர்ஜித்
சுர்ஜித்
குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

எவன் அவன்

பின்கூட்டிப் பிறந்த குழந்தைக்கு

முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன்

உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ

நடக்கக்கூடாதது நடந்தேறிவிட்டது

மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம்

மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம்

ஏய்... மடமைச் சமூகமே,

வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில்

மரணத்தின் பக்கவிளைவு ஞானம்தானே

அந்தச் சவக்குழிக்குள் மண் விழுவதற்குள்

அத்தனை அபாய குழிகளையும் மூடி விடு

அந்த மெழுகுவத்தி அனைவதற்குள்

அத்துனை கண்ணீரையும் துடைத்து விடு

ஏய்... வானம் பார்க்கும் தொழில்நுட்பமே

சற்றே குனிந்து பாதாளம் பார்

இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்"

என தனது இரங்கலில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.