தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஓர் கட்டடத்தை நகராட்சி அதிகாரிகள் திறந்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது குட்டி யானை ஒன்றின் உடல் சிதிலமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கட்டடம் தொடக்கப்பள்ளியின் சத்துணவுக் கூடமாகச் செயல்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் யானையின் எலும்புக் கூடுகளை மீட்டனர்.

அந்தக் கூடத்தின் பின்பகுதியில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டது. சில ஆண்டுகளாக அந்தக் கட்டடம் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. இதனால், குட்டி யானை ஓட்டை வழியாகப் புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``சத்துணவுக்கூடத்தில் அரிசி சாப்பிட உள்ளே புகுந்த யானை, பிறகு வெளியேற முடியாமல் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த யானை இறந்து சில மாதங்கள் ஆகியிருக்கும். அங்கிருந்த எலும்புக்கூடு உள்ளிட்ட பாகங்களைக் கைப்பற்றி, இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்.

விசாரணை முடிவில்தான் யானை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்” என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.