Published:Updated:

`வாழ்வாதாரம் கேட்டு நடைப்பயணம்!' -அடிப்படை வசதிக்காக அறவழியில் போராடும் வால்பாறை பழங்குடி மக்கள்

வால்பாறை பழங்குடி
வால்பாறை பழங்குடி

தங்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் கேட்டு வால்பாறை பழங்குடி மக்கள் இன்று நடைப்பயணத்தில் ஈடுபட உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் காடர், முதுவர், மலைமலசார், மலசார், எரவாளர், புலையர் என்று ஆறு வகையான பழங்குடி மக்கள் உள்ளனர். 13 செட்டில்மென்ட் கிராமங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்துவருகின்றனர்.

வால்பாறை பழங்குடி கிராமம்
வால்பாறை பழங்குடி கிராமம்

இந்தப் பகுதி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது என்பதால், விதிமுறைகளாலும் புதிய திட்டங்களாலும் அங்கிருக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ், ஆனைமலைத் தொடரில் இருக்கும் அனைத்துப் பழங்குடி மக்களுக்கும் வீட்டுமனை மற்றும் விவசாய பூமிக்கான பட்டா வழங்க வேண்டும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கு மாற்று இடமும், வாழ்வாதாரமும் வழங்க வேண்டும். ஆனைமலைத் தொடரில் இருக்கும் அனைத்து கிராமங்களையும் வருவாய் கிராமங்களாக மாற்றி,

வால்பாறை பழங்குடி
வால்பாறை பழங்குடி

குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பிடம், மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று அந்த மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

அந்த மக்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து குரல்கொடுத்துவருகின்றனர். ஆனால், தற்போதுவரை அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வால்பாறையிலி ருந்து கோவைக்கு 120 கி.மீ நடைப்பயணம் மேற்கொள்ள பழங்குடி மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

வால்பாறை பழங்குடி
வால்பாறை பழங்குடி

இதையடுத்து, வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு தலைமையில் அதிகாரிகள் அவசர அவசரமாக அந்த மக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது. இதனால் வால்பாறை பழங்குடி மக்கள், திட்டமிட்டபடி இன்று பேரணியைத் தொடங்க உள்ளனர். நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நடைப்பயண முடிவில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை 13-ம் தேதி நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

வால்பாறை பழங்குடி
வால்பாறை பழங்குடி

அதேபோல, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், இன்று காலை முதல் பொள்ளாச்சி டி.எஃப்.ஓ அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனால், அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனிடையே, அந்த மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான பணிகளில் ஈடுபடுவதாகப் பழங்குடி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, போராட்டத்தில் கலந்துகொள்ளும் தற்காலிக ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று வனத்துறையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வால்பாறை பழங்குடி
வால்பாறை பழங்குடி

‘எத்தனை இடர்கள் வந்தாலும் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்று அந்த மக்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு