Published:Updated:

`கூகுள் மேப் காட்டிய பாதை' - ஊட்டி சரிவுப் பாதையில் வேனுடன் விடியவிடிய தவித்த ஓட்டுநர்!

வேன்
வேன்

போராடிப் பார்த்து முடியாமல் வாகனத்திற்குள்ளேயே படுத்து உறங்கியுள்ளார். காலையில் கிரேனுக்கு ஏற்பாடு செய்து கயிறுகட்டி கிரேன் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.

வார விடுமுறையைக் கொண்டாட கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து ஒரு குரூப் வேன் மூலம் ஊட்டிக்கு வந்தனர். இவர்கள் ஊட்டி படகு இல்லம் அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியை புக் செய்திருந்தனர். வேனில் வந்த சுற்றுலாப் பயணிகளை இரவில் தங்கும் விடுதியில் இறக்கிவிட்டு வேன் ஓட்டுநர் உணவருந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு நகர்ப்பகுதிக்கு வந்துள்ளார். உணவருந்திவிட்டு விடுதிக்குத் திரும்ப மொபைல் போனில் ஜி.பி.எஸ்ஸைப் பயன்படுத்தியபடி வாகனத்தை இயக்கியுள்ளார்.

சரிவில் சிக்கிய வேன்
சரிவில் சிக்கிய வேன்

மேப் காண்பிக்கும் வழியில் தொடர்ந்து, குறுகிய சாலை ஒன்றில் சென்றுள்ளார். மேப் சரியாகத்தான் காட்டும் எனத் தொடர்ந்து அதே பாதையில் சென்றுள்ளார். அந்தச் சாலை செங்குத்தாகவும் குறுகியதாகவும் இருந்துள்ளது. தொடர்ந்து வேனை இயக்கிய ஓட்டுநருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் சென்ற சாலையில் ஓரிடத்தில், எந்த வாகனமும் செல்லாதவாறு இரும்புத் தூண்கள் நடப்பட்டிருந்தன.

கூகுள் மேப்பிலேயே இந்த மலைக்கு வழி கிடையாதுங்கோவ்!

அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுநர் வேனை பின்னால் எடுக்க முயற்சி செய்துள்ளார். செங்குத்தான சாலை என்பதால் வேனை பின்னாலும் இயக்க முடியவில்லை. போராடிப் பார்த்து முடியாமல் வாகனத்திற்குள்ளேயே படுத்து உறங்கியுள்ளார். காலையில் கிரேனுக்கு ஏற்பாடு செய்து கயிறுகட்டி கிரேன் உதவியுடன் வாகனத்தை மீட்டனர். ஒரு வழியாகத் தப்பித்தால்போதும் என்று, உதவிய அந்தப் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

சரிவுப் பாதையில் சிக்கிய வேன்
சரிவுப் பாதையில் சிக்கிய வேன்

இந்தச் சம்பவம் குறித்து ஊட்டி மேரிஸ்ஹில் பகுதி மக்கள் கூறுகையில், ``ஜி.பி.எஸ்., காட்டிய வழியைச் சரியானது என நினைத்து தனியார் பள்ளியை யொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் மிகவும் குறுகலான பாதையில் வேனுடன் வந்துவிட்டார். அந்தச் சாலையின் நடுவே ரயில்வே நிர்வாகம் சார்பில் தடுப்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு முழுவதும் இங்கேயே தங்கியிருந்த டிரைவரின் நிலையைக் கேள்விப்பட்டு அவருக்கு உதவினோம். நேற்று இரவு முதல் இங்கிருந்த வேனை, காலை 11 மணியளவில் கிரேன் உதவியுடன் மீட்டோம்.

ஜி.பி.எஸ் தவறாக வழி காட்டுவதுதான் இந்தநிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது. அப்பாவி ஓட்டுநர்கள் இரவில் தவிப்பது பரிதாபமானது. ஊட்டி செயின்ட் மேரிஸ் ஹில், ஜோசப் பள்ளி ஜங்க்ஷனில் படகு இல்லம் மற்றும் கர்நாடகப் பூங்கா செல்லும் சாலையிலும் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு