Published:Updated:

கோவை:``தடுப்பூசி இருக்கிறது; ஆனால் மக்களுக்கு செலுத்துவதில்லை" - குற்றஞ்சாட்டும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கோவை ஆபத்தான நிலையில் இருப்பதால் கூடுதால் தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,``கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே ஒரு மாவட்டத்தில் 4,234 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது அதிகம். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை வேண்டும். கோவை மாவட்டத்துக்கு கூடுதலான தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தினசரி 30,000 தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். மாநில அரசுக்கு, மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை அளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் மாநில அரசு கையிருப்பில் வைத்திருக்கும் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்லாமல், தொடர்ந்து தடுப்பூசிகளை மட்டும் கேட்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சென்னையை முந்திய கோவை - இந்த நிலைவரக் காரணம் யார்?

கையில் இருக்கும் தடுப்பூசிகளை இரண்டு நாள்களில் மக்களுக்கு செலுத்த வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் கூடுதலாக ஊசிகளை மட்டும் கேட்கிறார்கள். தடுப்பூசி தொடர்பாக மத்திய குழு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவிலேயே தடுப்பூசிகளை வீணாக்குவதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் மத்திய அரசு வெளிநாடுகளிலும் உள் நாடுகளிலும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

கோவையில் மார்ச் 17-ம் தேதி 686 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்போது கொரோனா பாதிப்பு 1,000 என்பதை தாண்டிவிட்டது. அது படிப்படியாக குறைந்து 21-ம் தேதி 172 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

மிக மிக ஆபத்தான சூழலில் கோவை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அரசியல் செய்ய வேண்டாம் என்கிறார். மக்கள் பணி செய்வதற்காக தான் நாம் அரசியலில் இருக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசியல் செய்வது எங்கள் நோக்கம் இல்லை. குறைந்தபட்சம் அடுத்த 10 நாள்களுக்காவது தினசரி 30,000 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான ஆக்சிஜனை பெற்றுள்ளோம். நான் கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. எங்கள் மாவட்ட மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். எனவே, தமிழகத்தில் ஒதுக்கும் தடுப்பூசியில் கோவை மாவட்டத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு