Election bannerElection banner
Published:Updated:

`வீட்டுக்கே வரும் காய்கறி!’ -தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட வாணியம்பாடி #corona

`கழுகு’ பார்வையில் வாணியம்பாடி
`கழுகு’ பார்வையில் வாணியம்பாடி

நோய்ப் பரவலைத் தடுக்க, ஆம்பூரைத் தொடர்ந்து வாணியம்பாடி நகரமும் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா கொடியத் தொற்றுக்கு இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேர் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள். மூவரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களுடைய தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், கொரோனாவைத் தடுக்கும் வகையில், வாணியம்பாடி நகரம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ராட்சச ஓவியம்
கொரோனா ராட்சச ஓவியம்

இதுதொடர்பாக, திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வாணியம்பாடியில் நோய்த் தொற்று பரவாமல் பொதுமக்களைப் பாதுகாக்கவும், சமூக விலகலைப் பின்பற்றி காய்கறிகளை வாங்கிச் செல்லவும் 90 நடமாடும் வாகனங்கள் மூலமாகக் காய்கறி, மளிகைப் பொருள்கள், பால், பழம் மற்றும் அனைத்து வகை இறைச்சிகளையும் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குழுக்களாக இணைந்து, வீடு வீடாகச் சென்று உடல் பரிசோதனை செய்து, வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தடுக்க நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கடந்த 14-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்
திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்

அதனடிப்படையில், நோய்ப் பரவலைத் தடுக்க வாணியம்பாடி நகரம் முழுவதும் இன்று (16-ம் தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. அனைத்து மக்களும் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் வரவேண்டாம். வாணியம்பாடி நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

காய்கறித் தொகுப்பு 100 ரூபாய்க்கும், மளிகைப் பொருள்கள் தொகுப்பு 500 மற்றும் 1,000 ரூபாய்க்கும் வழங்கப்படும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வயதானவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள், கட்டாயமாக வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். நகருக்குள் வந்து செல்லும் அனைத்து வாகனங்களின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படும்.

100 ரூபாய் காய்கறி தொகுப்பு
100 ரூபாய் காய்கறி தொகுப்பு

நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்களும் வீடு தேடி வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசரமான தேவைகளுக்கு, வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ள 8270007135, 8270007148, 8270007149, 8270007180 ஆகிய செல்போன் எண்களுக்கு போன் செய்யலாம். மேலும், 8270007258 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தகவல்களைத் தெரியப்படுத்தலாம்’’ என்று கூறியுள்ளார்.

நோய்ப் பரவலைத் தடுக்க கடந்த 13-ம் தேதி முதல், ஆம்பூர் நகரும் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு