Published:Updated:

`தள்ளுவண்டியை பழங்களோடு சாய்த்தது ஏன்?’-வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் விளக்கம்

தள்ளுவண்டியைச் சாய்த்த நகராட்சி கமிஷனர்
தள்ளுவண்டியைச் சாய்த்த நகராட்சி கமிஷனர்

காய்கறி, பழங்களை கூடையுடன் கீழே சாய்த்துக் கடைகளை இழுத்து மூடிய சம்பவத்துக்கு வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ், வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் கன்டெய்ன்மென்ட் ஸோனைத் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பல தொழில்களுக்கு நேரக் கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்குத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில், நடமாடும் வாகனங்கள் மூலமாகத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருள்கள், ரேஷன் பொருள்கள் வீடு தேடிச்சென்று விற்பனை செய்யப்படுகிறது.

தள்ளுவண்டியைச் சாய்த்த நகராட்சி கமிஷனர்
தள்ளுவண்டியைச் சாய்த்த நகராட்சி கமிஷனர்

``மறு அறிவிப்பு வரும் வரை தற்போது பின்பற்றப்படும் இந்த நடைமுறை மூலமாகவே காய்கறிகள் விற்பனை செய்யப்படும். அதுவரை வாணியம்பாடி நகரப் பகுதிகளில் காய்கறிச் சந்தைகள் இயங்காது’’ என்று மாவட்ட நிர்வாகம் தெளிவாக அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், வாணியம்பாடி நகரில் உள்ள சந்தையில் தடை உத்தரவை மீறி சில வியாபாரிகள் கடைகளைத் திறந்தும் தள்ளுவண்டியிலும் வியாபாரம் செய்யத் தொடங்கினர்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் கூட்டம் கூடினர். இதையறிந்த வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ், சந்தைப் பகுதிக்குச் சென்று கடைகளை மூடுமாறு கடந்த மூன்று தினங்களாக வியாபாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். ஒருவர் கூட கடையை மூடவில்லை. நகராட்சி கமிஷனரை அலட்சியப்படுத்தி வியாபாரத்தைத் தொடர்ந்தனர். இதனால், ஆத்திரமடைந்த கமிஷனர் சிசில் தாமஸ், கடைகளை நேற்று அதிரடியாக இழுத்து மூடினார்.

கீழே சாய்த்துவிடப்பட்ட பழங்கள்
கீழே சாய்த்துவிடப்பட்ட பழங்கள்

அப்போது, கடையிலிருந்த பழக் கூடைகளையும் காய்கறிக் கூடைகளையும் கீழே சாய்த்துவிட்டார். தள்ளுவண்டியிலிருந்த பழங்களில் சிலவற்றைத் தூக்கி வீசி வியாபாரிகளை எச்சரித்தார். கமிஷனரின் இந்த நடவடிக்கையை செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்த சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ வைரலானதால் நகராட்சி கமிஷனரை வலைதள வாசிகள் கடும் சொற்களில் வசைபாடுகிறார்கள். இந்தச் சம்பவத்துக்கு கமிஷனர் சிசில் தாமஸ் வருத்தம் தெரிவித்தபோதும் சமூக வலைதளங்களில் எதிர்மறை கருத்துகள் வலம்வருகின்றன.

நடந்தது குறித்து வாணியம்பாடியைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``நகராட்சி கமிஷனர் அவ்வளவு மோசமானவர் இல்லை. எல்லாரிடத்திலும் சகஜமாகப் பழகக் கூடியவர். மார்க்கெட் இயங்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் சில வியாபாரிகளால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் போன்று கொரோனாவைக் கொள்முதல் செய்யும் சந்தையாக மாறிவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் கமிஷனர் செயல்பட்டார். வியாபாரிகள் ஒத்துழைப்பு தராத காரணத்தினால் அவர்களை சும்மா மிரட்டிப் பார்க்க காய்கறிக் கூடைகளைச் சாய்த்துவிட்டார்.

கீழே சாய்த்துவிடப்பட்ட பழங்கள்
கீழே சாய்த்துவிடப்பட்ட பழங்கள்

அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட வியாபாரிகளில் ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. காரணம், தவறு கமிஷனர் மீது இல்லை. எல்லாவற்றுக்கும் பொறுமையாக இருப்பவரையே கடுப்பேத்தியிருக்கிறார்கள்’’ என்றனர்.

நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸிடமும் பேசினோம். ``நான், வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் அப்படிச் செயல்பட நேர்ந்தது. இரவு பகலாக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஆனால், ஓய்வில்லாமல் இவர்களுக்காகத்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வியாபாரிகளைக் கஷ்டப்படுத்துவது என்னுடைய நோக்கம் இல்லை. தவறை உணர்ந்துவிட்டேன். என்னுடைய செயலால் வியாபாரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு