Published:Updated:

மாவட்டங்களைப் போல் கிராமங்களை ஏன் முடக்கக் கூடாது?! -முதல்வருக்குச் சென்ற கடிதம்

COVID-19
COVID-19

மாவட்டங்களை முடக்கியது போல கிராமங்களையும் முடக்கி கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என வி.ஏ.ஓ சங்கம் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. சீனாவில் தொடங்கிய பாதிப்பு தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது- இதையடுத்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

கடிதம்
கடிதம்

இந்தியாவிலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியிருக்கிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பரவி மதுரையில் முதல் பலியும் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் மாவட்டங்களை முடக்கி அரசு செயல்படுவது போல கிராமங்களை முடக்கி தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலக சங்கம் தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து சங்க மாநிலச் செய்தி தொடர்பாளர் அருள் நம்மிடம், ``கொரோனாவின் கோர தாண்டவம் தமிழகத்தில் கடுமையாக நிலை நாட்டியுள்ளது. இதற்கு எதிராக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒவ்வொரு மாவட்டத்தையும் முடக்கியுள்ளது. இதனால் ஓரளவிற்குக் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதேபோல் ஒவ்வொரு கிராமத்தையும் நாம் முடக்கும் போது கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கொரோனா
கொரோனா

ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வரும் நபர்களையும் கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் தன்னார்வலர்கள் உடன் இணைந்து கிராமங்களுக்கு உதவலாம். ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர் கையிலும் தெர்மா ஸ்கேனர் கருவி இருக்கும் போது நோய் தொற்றைக் கண்டறிந்து மருத்துவத் துறையினருக்குத் தகவல் அளித்து அவர்களை அடுத்த கட்ட சிகிச்சைக்கு எடுத்துச் செல்லலாம்.

இந்தச் செயல்பாட்டில் மக்கள் சிரமம் கொள்ளாமல் இருக்க ரேசன் பொருள்களை உரிய கிராமத்திற்கு எடுத்துச் சென்று பள்ளி, அங்கன்வாடி, உள்ளிட்ட அரசு இடங்களில் வைத்து நேரடியாக விநியோகம் செய்யலாம். இதனால் கூட்டம் கூடவிடாமல் கட்டுப்படுத்த முடியும். அடிப்படை வசதிகளை நேரடியாகக் கொண்டு சென்று உதவும் போது மக்கள் வெளியேறமாட்டார்கள்.

கொரோனா
கொரோனா

இவ்வாறான செயல்பாடுகளை அரசு முன்னெடுத்தால் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஏன் கிராமங்களைக் கண்காணிக்க முடியாது?. இது போன்ற தகவலுடன் கூடிய கடிதத்தை முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு எங்கள் சங்கம் சார்பாக அனுப்பியுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு