Published:Updated:

`தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்குக் கனமழை!’ - எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாள்களுக்குக் கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை
மழை

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகக் கனமழை பெய்து வருகிறது. கிழக்கு நோக்கி வீசும் காற்று காரணமாகத் தமிழகம், புதுச்சேரி, லட்சத் தீவுகள், கேரளா போன்ற பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை
மழை

அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத் தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னை, மதுரை, கடலூர், கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், குமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பொழிந்துள்ளது. அதேபோன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய இடங்களிலும் நேற்று முதல் மிகக் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

தண்ணீரை பல வடிவங்களில் சேமிக்கும் முன்மாதிரி வீடு! மதுரை `நன்னீர்' கார்த்திகேயனின் ஆரோக்கிய முயற்சி

மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அநேக மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, போக்குவரத்து மற்றும் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

மழை
மழை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடியக் கொட்டித் தீர்த்து வருகிறது. கே.கே நகர், அண்ணாசாலை, ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வடபழனி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. மழையால் சாலைகள் எங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.