Published:Updated:

` ஊரடங்கால் தடைபட்ட உதவி; கலங்கிய மனநலம் பாதித்தோர்!' - களமிறங்கிக் கரம் கொடுத்த விகடன்

விகடன் அளித்த உணவுப் பொருட்கள்
News
விகடன் அளித்த உணவுப் பொருட்கள்

போக்குவரத்து முடக்கப்பட்டு கோயிலும் மூடப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளின் உதவியும் நின்றுபோனது. இதனால் மனநோய் பாதித்தவர்கள், தம் பசியைப் போக்க வழியின்றித் தவித்தனர்.

Published:Updated:

` ஊரடங்கால் தடைபட்ட உதவி; கலங்கிய மனநலம் பாதித்தோர்!' - களமிறங்கிக் கரம் கொடுத்த விகடன்

போக்குவரத்து முடக்கப்பட்டு கோயிலும் மூடப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளின் உதவியும் நின்றுபோனது. இதனால் மனநோய் பாதித்தவர்கள், தம் பசியைப் போக்க வழியின்றித் தவித்தனர்.

விகடன் அளித்த உணவுப் பொருட்கள்
News
விகடன் அளித்த உணவுப் பொருட்கள்

கொரோனா வைரஸின் நேரடித் தாக்குதலுக்கு நிகராக சமூகப் பொருளாதார தாக்குதல்களும் விளிம்புநிலை மக்களை வேதனைக்குள்ளாக்கிவருகிறது. `அன்றாட வயிற்றுப்பசியைப் போக்க வழி பிறக்காதா?' என ஒவ்வொரு நாளும் ஏங்கித்தவிக்கும் அந்த மக்களின் கைகள், தங்களை அறியாமலேயே உதவிகோரி நீளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்த உதவியைக்கூட சுயமாக கேட்டுப் பெற முடியாத அவலநிலையில் பராமரிக்கப்பட்டுவரும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் ஊரடங்கு பாதிப்பு விட்டுவைக்கவில்லை.

மனநலம் காப்பகத்திற்கு விகடன் வழங்கிய உணவு பொருட்கள்
மனநலம் காப்பகத்திற்கு விகடன் வழங்கிய உணவு பொருட்கள்

புனிதத்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள வீதிகளில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநலம் பாதித்த ஏராளமானோர் சுற்றித்திரிந்துவந்தனர். இவ்வாறு ஆதரவு இன்றித் திரிந்த மனநலம் பாதித்தோரை மீட்டு, அவர்களைப் பாதுகாக்கும் வகையில், 'மனோலயா' என்ற காப்பகம் ராமேஸ்வரத்தில் இயங்கி வருகிறது.

விகடனின் அறப்பணி மூலம் வழங்கப்பட்டவை
விகடனின் அறப்பணி மூலம் வழங்கப்பட்டவை

நாகர்கோயிலைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் சார்தீப் (CHARDEP) எனும் தொண்டு நிறுவனத்தின்கீழ் நடத்தப்பட்டு வரும் இந்தக் காப்பகத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 40 பேர் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்கள்.

கடந்த 2017-ல் தொடங்கப்பட்ட இந்த மனநலக் காப்பகத்தின்மூலம் குணமடைந்த 12 பேர், தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள மீனவ மக்கள், வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தரும் நன்கொடைகள் ஆகியவற்றின் மூலம், இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களின் பசியைப் போக்கினர்.

இந்நிலையில், நாட்டையே பேரிடரில் தள்ளியுள்ள கொரோனா ஊரடங்கு இவர்களையும் விட்டுவைக்கவில்லை. உதவிக்கரம் நீட்டி வந்த மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லமுடியாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்கே வழியின்றிப் போயினர். போக்குவரத்து முடக்கப்பட்டு கோயிலும் மூடப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளின் உதவியும் நின்றுபோனது. இதனால் மனநோய் பாதித்தவர்களின் பசி போக்க வழியின்றி தவித்துப்போயினர் மனோலயா காப்பகத்தின் நிர்வாகிகள். குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அரசின் எந்த அடையாளமும் இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களுக்கு இல்லாததால், அரசு வழங்கும் கொரோனா நிவாரண உதவிகளையும் பெற முடியவில்லை.

அரிசி பைகளை பெறும் காப்பகத்தினர்.
அரிசி பைகளை பெறும் காப்பகத்தினர்.

அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் ஏதும் இல்லா நிலையில் அவதியுற்றுவந்த இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்த ஆனந்த விகடன், அவர்களின் பசியைப் போக்க களத்தில் இறங்கியது. கொரோனா பேரிடரில் தவிக்கும் மக்களுக்காக உதவிவரும் வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டோம்.

இதையடுத்து, கடந்த 24-ம் தேதி, மனோலயா காப்பகத்தில் பராமரிக்கப்படும் மனநலம் பாதித்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, விகடன் குழுமத்தின் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான 540 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. ரூ. 46,878 மதிப்பிலான அரிசி, ரவை, பருப்பு வகைகள், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 23 வகையான மளிகைப் பொருள்களை வழங்கினோம். இந்தப் பணிகளை மேற்கொள்ள ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகி என்.ரவிச்சந்திரன் உதவியாக இருந்தார்.

'' எங்களின் `சார்தீப்' தொண்டு நிறுவன எம்.டி மணிகண்டனின் முயற்சியால், கடந்த 3 வருடங்களுக்கு முன் இந்தக் காப்பகம் தொடங்கப்பட்டது. பல்வேறு மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மட்டுமே இங்கு பராமரிக்கபட்டு வருகின்றனர். நாட்டின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்குள்ளனர்.

பசியைக்கூட எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாத நிலையில் அவர்களில் சிலர் உள்ளனர். எங்களைச் சுற்றியுள்ள மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அவ்வப்போது வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் இவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிவந்தோம். இவை தவிர சிலர் பிறந்தநாள், திருமண நாள், முன்னோர்கள் நாள்கள் போன்றவற்றின்போது சிறப்பு உணவுகளை வழங்கி உதவினர். இவை எல்லாம் கொரோனா ஊரடங்குக்கு முன்னர் நடந்தவை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலாக, அன்றாட உணவுத் தேவைகளைக்கூட முழுமையாக அளிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டோம்.

மனோலயா காப்பகம்
மனோலயா காப்பகம்

இதுநாள் வரை உதவி செய்தவர்களும் ஊரடங்கினால் தொழிலை இழந்துள்ளனர். இந்நேரத்தில் அவர்களிடம் உதவி கேட்பதன் மூலம் அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவும் தயக்கமாக இருந்தது. இத்தகைய இக்கட்டான தருணத்தில், விகடன் செய்த பெரும் தொகை மதிப்பிலான இந்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, காப்பகம் தொடங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை எங்களுக்கு இவ்வளவு பெரிய உதவி கிடைத்ததில்லை. விகடனின் இந்த உதவியைக்கொண்டு, இனி வரும் 30 நாள்கள் மட்டுமல்ல, அதற்கும் கூடுதலாக சில தினங்களுக்கும் இங்குள்ளவர்களின் பசியைப் போக்க முடியும்'' என நெகிழ்ந்தனர் மனோலயா காப்பக மேலாளர் சுனில்குமாரும், பொதுத்தொடர்பு அலுவலருமான சிவராஜும்.