Published:Updated:

நிவர் புயல்: நிம்மதியைத் தொலைத்த மக்கள்! - எதிர்கொள்ளத் தயாராகும் வேதாரண்யம்

வேதாரண்யம்
வேதாரண்யம்

நாகை மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் 24, 25, 26 தேதிகளில் கனமழையும்,  120 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த வேதாரண்யம் பகுதி மக்கள், இந்தப் புயலின் அறிவிப்பைக் கண்டு அச்சமடைந்திருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமாகவே முன்வந்து செய்துவருகின்றனர்.

நிவர் புயல்
நிவர் புயல்

கூரை வீடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளுக்கு தார்ப்பாய்  போட்டும்,ஓட்டு வீட்டிலுள்ளவர்கள் ஓடுகளைப் பிரித்துப் பாதுகாப்பாகவும் வைத்துவருகின்றனர். புயலில் பாதிக்காத அளவுக்கு வீடுகளின் ஓரமாக இருக்கும் மா, தென்னை மரங்களிலுள்ள கிளைகள் மற்றும் தென்னை மட்டைகளை வெட்டியிருக்கிறார்கள். தாங்கள் வளர்க்கும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்த்துக்கு ஓட்டிச் சென்று பத்திரப்படுத்தியிருக்கிறார்கள். கால்நடைத் தீவனமான வைக்கோல். கடலைத்தழை ஆகியவற்றை தார்ப்பாயால் மூடி வைத்திருக்கிறார்கள். கடுங்காற்று வீசும் என்ற பயத்தில் மின் பாதைகளிலுள்ள மரங்களைத் தாங்களாகவே முன்வந்து வெட்டிவருகின்றனர்.

வேதாரண்யம் பகுதியிலுள்ள  ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை , புஷ்பவனம்,  வெள்ளப்பள்ளம்,  வானவன் மகாதேவி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களிலிருக்கும் மீனவர்கள்   கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளையும் வலைகளையும் டிராக்டர் உதவியுடன் தூரமான, மேடான பகுதிகளுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள்.

நிவர் புயல்
நிவர் புயல்

புயல் அடிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள்  மளிகை, அரிசி, காய்கறி, மெழுகுவத்தி, டார்ச் லைட், பேட்டரி  போன்ற அத்தியாவசியப் பொருள்களையும் முன்கூட்டியே வாங்கி இருப்புவைத்திருக்கின்றனர். அதேபோல் தங்கள் வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல் நிரப்பிவருகின்றனர்.

புயலடித்தால்  மிகுந்த பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் அனைத்தையும் பொதுமக்கள் தங்களாகவே முன்வந்து செய்துவருகின்றனர். கோடியக்கரையில் மீன்துறை அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடலிலிருக்கும் மீனவர்களுக்கும், படகின் உரிமையாளர்களுக்கும் புயல் எச்சரிக்கை செய்து கடலில் தங்கியிருக்கும் மீனவர்கள்  விரைவில் கரை திரும்ப வேண்டுமென்றும், மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக இந்தப் பகுதி மக்களை நிவர் புயல் நிம்மதியில்லாமல் செய்துவருகிறது. எனினும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராகிவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு