Published:Updated:

வேதாரண்யம்: `மக்கள் தணிக்கை!'- வரவு, செலவு நோட்டீஸ் விநியோகித்த ஊராட்சித் தலைவர்

ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன்
ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன்

``ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரிகள் கணக்கைத் தணிக்கை செய்தாலும், தற்போது, மக்கள் தணிக்கைக்கு வரவு, செலவு கணக்குகளை நோட்டீஸாக அச்சடித்து விநியோகம் செய்திருக்கிறேன்.’’

வேதாரண்யம் அருகே ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை நோட்டீஸாக அச்சடித்து ஊராட்சியிலுள்ள 1,640 வீடுகளுக்கும், வீடு வீடாகச் சென்று வழங்கியிருக்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் செயல் மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

அறிக்கை
அறிக்கை

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவிலுள்ள  கருப்பம்புலத்தில் சென்ற ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட பட்டதாரி இளைஞர் சுப்புராமன் வெற்றிபெற்றார். பதவியேற்ற நாள் முதல் பஞ்சாயத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலோடு, மக்களுக்குத் தேவையான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துவருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, பதவியேற்றதிலிருந்து இன்றைய தேதி வரையுள்ள வரவு செலவுகளை  நோட்டீஸாக அச்சடித்து ஊராட்சியிலுள்ள  அனைத்து வீடுகளுக்கும்  வழங்கிவருகிறார். மேலும், 100 நாள் வேலைவாய்ப்புப் பணியிடங்கள், வணிக வளாகங்கள், அங்காடிக்கு வரும் மக்கள் ஆகியோருக்கும் வழங்கிவருகிறார். ஊராட்சியின் பொது இடங்களிலும் மக்கள் பார்வைக்காக வைத்திருக்கிறார்.

நாகை: இயற்கைப் பேரிடரைத் தடுக்க 1,00,000 பனை விதைகள் நடவு... ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை!

ஊராட்சி மன்றத் தலைவராக  சுப்புராமன் பதவியேற்ற பிறகு ஊராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம் ஆகிய பணிகளைச் சிறப்பாக செய்துவருகிறார்.  தற்போது ஊராட்சியின் வரி வசூல் எவ்வளவு, மொத்த வரவு, இதுவரை செய்யப்பட்ட செலவு, பகிர்வு தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அடக்கிய தெளிவான நோட்டீஸ் மக்கள் மத்தியில் வழங்கிவருவது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஊராட்சி மன்றத் தலைவர்
ஊராட்சி மன்றத் தலைவர்

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமனிடம் பேசினோம். ``ஊராட்சியில் நடக்கும் வரவு, செலவு கணக்குகளை ஊர் மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஊராட்சியின் நிலவரம் மக்களுக்குப் புரியவரும். ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரிகள் கணக்கை தணிக்கை செய்தாலும், தற்போது மக்கள் தணிக்கைக்கு வரவு, செலவு கணக்குகளை நோட்டீஸாக அச்சடித்து விநியோகம் செய்திருக்கிறேன். வரவு, செலவு கணக்குகளை மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் வெளிப்படையானது, ஊழலற்றது என்பது கிராம மக்களுக்குப் புரியவரும்" என்றார்.

கருப்பம்புலம் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை, சமூக வலைதளங்களிலும் வலம்வருகிறது. ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை மக்களுக்கு வெளியிட்ட கருப்பம்புலம் ஊராட்சி மன்றத்  தலைவர் சுப்புராமன் மற்றும் உறுப்பினர்களுக்கு அவ்வூராட்சி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்

அடுத்த கட்டுரைக்கு