Published:Updated:

`முடங்கிய போக்குவரத்து; லட்சக்கணக்கான வாகன ஓட்டுநர்களின் நிலை..?’ -சங்க நிர்வாகியின் ஆதங்கம்

சாலைப் போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து

"சென்னையில் ஒரு லட்சம் ஆட்டோக்கள் இயங்கிவந்த நிலையில், தற்போது 10,000 ஆட்டோக்கள்கூட இயங்கவில்லை."

கொரோனா அச்சுறுத்தலால் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுகிறார்கள். இதனால், தமிழகத்தில் வாகனப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால், லட்சக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். இதுகுறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜீட் மேத்யூவிடம் பேசினோம்.

சாலைப் போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து

``இயல்பு நிலையில், சென்னையில் ஒரு லட்சம் ஆட்டோக்கள் இயங்கிவந்த நிலையில், தற்போது 10,000 ஆட்டோக்கள்கூட இயங்கவில்லை. தனியார் கேப் நிறுவனங்களின் சார்பில் சென்னையில் மட்டும் ஒருநாளைக்கு 15,000 கார்கள் இயங்கிவந்த நிலையில், தற்போது 1,000 கார்கள் மட்டுமே இயங்கிவருகின்றன. பிரபல தனியார் கேப் நிறுவனம் ஒன்றில், சென்னை விமான நிலையத்துக்குச் செல்வதற்காக ஒருநாளை 1,800 பேர் பதிவு செய்வார்கள். ஆனால், தற்போது சராசரியாக 300 பேர்தான் பதிவு செய்திருக்கிறார்களாம்.

கொரோனா பாதிப்பால் மக்கள் சாலைப் போக்குவரத்தைக் குறைத்துக்கொண்டதால், கார், ஆட்டோ, கேப், லாரி, டெம்போ உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டுநர்கள் என ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 20,00,000 பேர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.

சாலைப் போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து

எங்களுடைய சங்கத்தில் 4,500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்தத் தகவல்களையெல்லாம், சென்னையிலுள்ள பிரபலமான 16 போக்குவரத்துச் சங்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் வாயிலாக அறிந்த வகையில் சொல்கிறேன்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் வேலை வாய்ப்பு இழந்துள்ள தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசித்துவருவதாகக் கேரளா முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால், இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாடகை வாகனங்களை ஓட்டும் பல லட்சம் ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ள நிலையில், வங்கி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெற்ற வாகனங்களுக்கான கடனைக் கட்டுவதும் பெரும் சிரமமாகியிருக்கிறது.

ஜீட் மேத்யூ
ஜீட் மேத்யூ

எனவே, வட்டித் தொகையைச் செலுத்தக் கூடுதல் கால அவகாசம் கொடுப்படுதுடன், இதற்காக எவ்வித அபராதமும் விதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் லட்சக்கணக்கான வாடகை ஓட்டுநர்களின் எதிர்பார்ப்பு. இதையெல்லாம் போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்து ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு