Published:Updated:

ஈரோடு: தினமும் ரூ.2 லட்சம் கலெக்‌ஷன்; ரெய்டில் அம்பலம்... மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி

மோட்டார் வாகன ஆய்வாளர் (எம்விஐ) சுகந்தியை சஸ்பெண்ட் செய்யுமாறு மண்டல போக்குவரத்து ஆணையருக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் பரிந்துரைத்துள்ளதன் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ஈரோடு: தினமும் ரூ.2 லட்சம் கலெக்‌ஷன்; ரெய்டில் அம்பலம்... மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மோட்டார் வாகன ஆய்வாளர் (எம்விஐ) சுகந்தியை சஸ்பெண்ட் செய்யுமாறு மண்டல போக்குவரத்து ஆணையருக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் பரிந்துரைத்துள்ளதன் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். ரெய்டின்போது, அங்கிருந்து யாரும் வெளியேற முடியாத அளவுக்கு முன், பின்புற கதவுகள் அடைக்கப்பட்டன. அப்போது, அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளருக்கும், இதர அலுவலர்களுக்கும் பணப்பட்டுவாடா செய்வதற்காக புரோக்கர்கள் காத்திருந்தனர் என சொல்லப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் வந்திருப்பதை அறிந்த புரோக்கர்கள், அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த லஞ்சப் பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி வீசினர். இதைக் கண்ட போலீஸார் வெளியே வீசிய பணத்தையும், ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ரூபாய் நோட்டுகளையும் சேகரித்துக் கொண்டனர்.  

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்.

பின்னர், மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, வாகன போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், புரோக்கர்கள் ஆகிய 10க்கும் மேற்பட்டோரை சோதனையிட்டதில் கணக்கில் வராத ரூ. 2.10 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் (எம்விஐ) சுகந்தி, புரோக்கர்களாக செயல்பட்ட சந்தோஷ், வரதன் என்கிற வரதராஜ், சம்பு என்கிற சண்முகம், நல்லசாமி உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

புதிய வாகனங்களுக்கு எண் அளித்தல், வாகன ஓட்டுநர் உரிமம் அளித்தல், வாகனங்கள் புதுப்பித்தல், எஃப்சி வாகனங்களுக்கு சான்றளித்தல், கூண்டு கட்டிய வாகனங்களுக்கு அனுமதியளித்தல், கன்டெய்னர் லாரிகளுக்கு சான்றளித்தல் என பலத்தரப்பட்ட பணிகளுக்கும் அரசு நிர்ணயித்ததை விடப் பல மடங்கு கட்டணத்தை புரோக்கர்கள் மூலமாக எம்விஐ சுகந்தி வசூலித்து வந்தது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக எல்எல்ஆர் போட ரூ.1000 முதல் 1500-ம், எஃப்சிக்கு ரூ.1000 முதல் 5000 வரையும், கன்டெய்னர் லாரிகளுக்கு சான்றளிக்க ரூ. 10,000 வரை, பாடி கட்டிய வாகனங்களுக்கு ரூ.5,000, புதிய இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 முதல் 5,000 வரை வாகனங்களின் மாடலுக்கு ஏற்றவாறு லஞ்சம் வசூலித்து வந்துள்ளனர்.

பவானி, அந்தியூர் ஆகிய 2 தாலுகாவிலுள்ள எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், பர்கூர், அம்மாபேட்டை, ஒலகடம் என 100க்கும் மேற்பட்ட முக்கிய ஊர்களின் வாகனப்பதிவு தொடர்பான பணிகளுக்கு இந்த அலுவலகத்துக்குத்தான் வரவேண்டும். எனவே, இங்கு தினந்தோறும் அதிக மாமூல் கலக்‌ஷென் ஆகும் எனக் கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் லஞ்சம் கிடைக்கும் என்பதால் இங்கு பணியாற்ற வருவோர் மேலிடத்தை வெயிட்டாக கவனித்தால்தான் இங்கு போஸ்டிங் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் இங்கு வந்த எம்விஐ சுகந்தி, இங்குள்ள 25க்கும் மேற்பட்ட புரோக்கர்களின் உதவியுடன் கல்லா கட்டியது லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

ரெய்டில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார்.
ரெய்டில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

அனைத்து பதிவுகளையும் ஆன்லைனில் தான் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு சொன்னாலும், ஆன்லைனில் பதிவு செய்திருக்கும் நபர்களை புரோக்கர்கள் அணுகி அவர்கள் பணியை முடிக்க ரேட் பிக்ஸ் பண்ணுகிறார்கள். பணம் இல்லாவிட்டால் எந்த வேலையும் நடக்காது என்பதால் கேட்ட தொகையை கொடுப்பவர்களுக்கே பணியில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான சிலர் லஞ்ச ஒழிப்பு போலீஸூக்கு தகவல் அளிக்கவே, திடீர் ரெய்டு நடத்தி இங்கு நடக்கும் லஞ்ச ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார். ரெய்டு குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜேஷ் நம்மிடம் கூறியதாவது, ``  வாகனப்பதிவு பணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஆன்லைனில் கட்டினாலும் அவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படுவதில்லை. புரோக்கர்கள் மூலம் ரேட் பிக்ஸ் செய்பவர்களுக்கு மட்டுமே பணிகளை செய்து வருவதாகவும், புரோக்கர்களை தவிர்ப்பவர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி அவர்களது விண்ணப்பங்களை நிராகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் ரெய்டு நடத்தியதில் ஒரேநாளில் ரூ.2.10 லட்சம் லஞ்சப்பணம் சிக்கியது. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சந்தோஷ், சுகந்தியின் டிரைவராகவும், சம்பளம் வாங்கி கொண்டு புரோக்கர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து தரும் ஏஜென்டாக  செயல்பட்டு வந்திருக்கிறார். இதுதவிர வரதன், சண்முகம் ஆகியோரும் முக்கிய புரோக்கர்களாக செயல்பட்டு வந்திருக்கின்றனர்.

ரெய்டில் உள்புறமாக பூட்டப்பட்ட அலுவலகத்தில் சிக்கிக் கொண்ட ஊழியர்களும், புரோக்கர்களும்
ரெய்டில் உள்புறமாக பூட்டப்பட்ட அலுவலகத்தில் சிக்கிக் கொண்ட ஊழியர்களும், புரோக்கர்களும்

சுமார் 50 கி.மீ. சுற்றுப் பரப்பளவில் வாகனப்பதிவு தொடர்பான பணிகளுக்கு இந்த அலுவலகத்தை தான் தேடி வருகின்றனர். பணம் தராதவர்களை இழுத்தடித்தால் அவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது என்பதால் கேட்டத் தொகையை புரோக்கர்களிடம் கொடுத்து பணியை முடிக்க பார்க்கிறார்கள். மாதம் சராசரியாக ரூ.15 லட்சத்துக்கும் மேல்பணம் வசூலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே, சுகந்தி உள்பட 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் சுகந்தி உள்ளிட்ட 5 பேரின் வீடுகளிலும் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
 
இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தியை சஸ்பெண்ட் செய்யுமாறு மண்டல போக்குவரத்து ஆணையருக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் பரிந்துரைத்துள்ளதன் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.