Published:Updated:

`3 நீதிபதிகளுக்கு கொரோனா!’ - ஹாட்ஸ்பாட்டாகத் தகிக்கும் வேலூர்

வேலூர்
வேலூர்

வேலூரில் இன்று ஒரே நாளில், 3 நீதிபதிகள் உட்பட 129 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாகத் தகிக்கிறது வேலூர் மாவட்டம். தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கிவிட்டது. இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 11 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். ஆரம்பக்கட்டத்தில் இரட்டை இலக்கில் பாதிப்பு இருந்தது. தற்சமயம், தினந்தோறும் மூன்று இலக்கில் தொற்று எண்ணிக்கை கூடுகிறது.

வேலூர் நீதிமன்றம்
வேலூர் நீதிமன்றம்

இன்று ஒரே நாளில் மட்டும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகர தகவல் என்னவென்றால் ஒரு பெண் நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் உள்ள தொற்றுநோய் வார்டில் 3 நீதிபதிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பிலிருந்த நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை சரியாக 1,378 என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். அதேநேரம், இளம் வயதினர்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வேலூர் நீதிமன்றம்
வேலூர் நீதிமன்றம்

ஊரடங்கிலும், தேவையற்ற காரணங்களுக்காக இளம் வயதினர் வெளியில் சுற்றுகிறார்கள். தொற்றுக்குள்ளானவர்களில் 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகம் என்று விவரிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ``இளம் வயதினர் வீட்டுக்கு அடங்காமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களால் குடும்பம் மற்றும் சுற்றத்தாருக்கும் தொற்று நோய் ஏற்படுகிறது’’ என்று எச்சரித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு