Published:Updated:

வேலூர்: `குழந்தைங்க உசுர காப்பாத்திக் கொடுங்க..!’ - கலங்க வைக்கும் பெற்றோரின் துயரம்

பிள்ளைகளுடன் பாலாஜி - ஜோதி தம்பதி
பிள்ளைகளுடன் பாலாஜி - ஜோதி தம்பதி

அரியவகை கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகன், மகளைக் காப்பாற்றித் தரக்கோரி துயரம் நெஞ்சை அடைக்கக் கதறுகிறார்கள், சேலத்தைச் சேர்ந்த பாலாஜி - ஜோதி தம்பதியர்.

கடந்த 14-ஆம் தேதி இரவு 10 மணி இருக்கும். புதிய எண்ணிலிருந்து நமக்கு அழைப்பு வந்தது. அட்டண்ட் செய்த உடனே, ‘‘என் குழந்தைங்க உசுர காப்பாத்திக் கொடுங்க சார்...’’ என்று கதறிய ஆண் ஒருவரின் அழுகுரல் கேட்டது. நம்பிக்கை வார்த்தைகளால், அவரை சற்று ஆசுவாசப்படுத்திப் பின் பிரச்னைகளைக் கேட்டறிந்தோம். ‘‘நான், சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கத்துல இருக்கிற மேட்டுப்பட்டி கிராமத்துல இருந்து பாலாஜி பேசுறேன். எனக்கு 12 வயசுல கிஷோர்னு ஒரு பையனும், 10 வயசுல பூஜிதாங்கிற ஒரு பொண்ணும் இருக்கிறாங்க. என் பசங்க ரெண்டு பேருமே ‘ஃபான்கோனி அனீமியா’ (Fanconi Anemia) என்ற அரியவகை ரத்தக் கோளாறு நோயால பாதிக்கப்பட்டிருக்காங்க.

பாலாஜி - ஜோதி தம்பதியர்
பாலாஜி - ஜோதி தம்பதியர்

வேலூர்ல இருக்கிற சி.எம்.சி தனியார் மருத்துவமனையிலதான் ரெண்டு வருஷமா ட்ரீட்மென்ட் பாத்துக்கிட்டிருக்கிறேன். பசங்க கன்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு. ஆபரேஷன் பண்ணலைனா புள்ளைங்க உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிடும்னு டாக்டருங்க சொல்லியிருக்காங்க. பொண்ணுக்கு ஆரம்பக்கட்ட நோய் பாதிப்பு. பையனோட நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு’’ என்று தன் துயரைக் கொட்டினார் பாலாஜி. மறுநாள் காலை விடிந்ததும், சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்தோம்.

நோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட பாலாஜியின் மகனுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் ‘ட்ரிப்ஸ்’ ஏறிக்கொண்டிருந்தது. மகள் பூஜிதாவை கைக்கு இறுக்கமாக அணைத்தபடி பாலாஜியும், அவரின் மனைவி ஜோதியும் அருகில் அமர்ந்திருந்தனர். படுக்கையில் கிடந்த மகனைப் பார்த்து, ‘குணமாகி எழுந்துவிட மாட்டானோ’ என்ற ஏக்கத்தில் கண்ணீர் பொங்க அவர்கள் கரைந்துகொண்டிருந்தனர். நோயின் தன்மையை அறிய சி.எம்.சி மருத்துவர்கள் கொடுத்திருந்த அறிக்கைகளைப் பார்த்தபோது, இது ஒரு தீர்க்க முடியாத நோய் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ந்துப்போனோம்.

சிகிச்சை பெறும் கிஷோர்
சிகிச்சை பெறும் கிஷோர்

துயரத்தின் வலியை மேலும் கொட்டிய பாலாஜி, ‘‘எனக்கு சொத்துபத்து எதுவும் கிடையாது. ஆக்டிங் டிரைவர் வேலை செய்யறேன். கார், மார்க்கெட்டுக்குப் போற வண்டிகளை ஓட்டுறதுல மாசம் பத்து, பதினைந்தாயிரம் ரூபாய் கிடைச்சிக்கிட்டிருந்தது. பசங்களை கவனிச்சிக்கிறதனால வேலைக்கும் போக முடியலை. வாடகை வீட்டுலதான் தங்கியிருக்கிறோம். பையனும் பொண்ணும் ஊர்ல இருக்கிற அரசுப் பள்ளியில படிச்சிக்கிட்டிருந்தாங்க. இந்த வருஷம் பையன் ஆறாவதும், பொண்ணு நாலாவதும் போக வேண்டியது. கொரோனா காரணமா இன்னும் ஸ்கூல் ஓப்பன் ஆகலை. அப்படியே, ஓப்பன் ஆனாலும் பசங்க இருக்கிற சூழ்நிலையில போக முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரத்த அணுக்கள் பாதிப்பால சாதாரண காய்ச்சல் வந்தாலும் ரெண்டு பேரும் தாங்க மாட்டாங்க. ஒண்ணரை மாசத்துக்கு முன்னாடி பையன் படுத்தபடுக்கையாகிட்டான். பொண்ணும் அடிக்கடி சுருண்டு படுத்துக்கிறா... சி.எம்.சி-யில பையனையும், பொண்ணையும் அட்மிட் பண்ணி ஒரு மாசம் ஆகுது. ரெண்டு பேருக்குமே, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய 60 லட்சம் ரூபாய் ஆகும்னு டாக்டருங்க ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. நானும் என் மனைவியும்தான் டோனரா இருக்கோம். ஆபரேஷன் செய்ய கையில சுத்தமா பணம் இல்லை. இப்ப பார்க்கிற ட்ரீட்மென்ட் செலவுக்கே சொந்தக்காரங்க, நண்பர்கள்கிட்ட உதவியாவும், கடனாவும் வாங்கித்தான் பண்றேன்.

"அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதிப்புகள் ஆயுள் முழுவதும் இருக்கும். அறுவை சிகிச்சையை நாள் கடத்தினால், ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டுவிடும்."
மருத்துவர்கள்

சி.எம்.சி-யை விட்டால் சென்னையிலிருக்கிற ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலதான் இந்த அறுவை சிகிச்சையை செய்யிற வசதி இருக்குதுன்னு சொல்றாங்க. அரசு மருத்துவமனைக்குப் போனா திரும்பவும் முதல்ல இருந்து செக்-அப் பண்ணுவாங்க. ஏற்கெனவே, நோய்த்தொற்று தீவிரமாகிடுச்சு. ஆரம்பத்துல இருந்து பசங்களுக்கு சி.எம்.சி-யிலயே ட்ரீட்மென்ட் எடுத்ததனால திடீர்னு அரசு மருத்துவமனைக்குப் போறதும் நல்லது இல்லைன்னு டாக்டருங்க சொல்றாங்க. இந்த ரெண்டு உயிரை நம்பிதான் நானும், என் பொண்டாட்டியும் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். பசங்களைக் காப்பாத்தினாலும் அவங்க எதிர்காலம் கேள்விக்குறின்னு சொல்றாங்க. என்ன நடந்தாலும், என் புள்ளைங்க உசுரக் காப்பாத்தி எங்ககிட்ட கொடுத்திடுங்க’’ என்று பாலாஜி கூறியபோது, அருகிலிருந்த அவரின் மனைவி ஜோதி கதறி அழுதார்.

மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘பரம்பரை ரத்தக் கோளாறுகளால் ஏற்படக்கூடிய நோய் வகைகளில் ஒன்றுதான் ஃபான்கோனி அனீமியா. குறிப்பாக, ஒற்றை மரபணுக் குறைபாட்டால் ஏற்படும். இந்த நோயைப் பூர்ணமாக குணப்படுத்த முடியாது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வதன்மூலம் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யலாம். அதுவும், ஆரம்பக்கட்ட சிகிச்சையின்போதே அறுவை சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உயிருக்கே ஆபத்தாகக்கூட முடிந்துவிடும்.

பிள்ளைகளுடன் பாலாஜி - ஜோதி
பிள்ளைகளுடன் பாலாஜி - ஜோதி

எலும்பு மஜ்ஜை என்பது பஞ்சு போன்ற கொழுப்புத் திசுதான். ஸ்டெம் செல்கள் மூலம் ஆரோக்கியமான ரத்தத்தை உருவாக்கும் செயல் முறைதான் இந்த அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சையை பாதிக்கப்பட்டோரின் உடலிருந்தே செல்களை எடுத்துச் செய்யலாம் அல்லது நன்கொடையாளர்கள் மூலமும் செய்ய முடியும். அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாலும் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதிப்புகள் ஆயுள் முழுவதும் இருக்கும். அறுவை சிகிச்சையை நாள் கடத்தினால், ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டுவிடும். பாலாஜியின் பிள்ளைகளும் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சையைச் செய்துவிட வேண்டும்’’ என்றனர்.

அரியவகை நோயினால் அவதிப்படும் இந்த இரண்டு பிள்ளைகளின் உயிரையும் காப்பாற்றித்தர தமிழக அரசு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்துதர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
அடுத்த கட்டுரைக்கு