Published:Updated:

`ஒரே மணிநேரத்தில் தயாரான உத்தரவு!' - வேலூர் மாற்றுத் திறனாளியை நெகிழவைத்த கலெக்டர்

மாற்றுத்திறனாளி நபருக்கு உதவித்தொகை வழங்கக்கோரி விகடனில் செய்தி வெளியிட்ட ஒரு மணி நேரத்தில், வேலூர் கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

உதவித்தொகை சான்றுடன் மாற்றுத்திறனாளி ராமு
உதவித்தொகை சான்றுடன் மாற்றுத்திறனாளி ராமு

வேலூர் சத்துவாச்சாரி மடம் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பா மகன் ராமு (60). பிறக்கும்போதே இவருக்கு, போலியோ பாதித்து இரண்டு கால்களும் சுருங்கிவிட்டதால், எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாது. சற்று மனநிலையும் பாதிக்கப்பட்டு துயர நிலையில் வாழ்ந்துவரும் மாற்றுத்திறனாளி ராமுவுக்கு 92 வயது நிரம்பிய தாயும் உள்ளார். சாப்பாட்டுக்கே வழியில்லாததால் அரசின் உதவித்தொகை கேட்டு தாசில்தார் உட்படப் பல அதிகாரிகளிடம் நான்கைந்து முறை விண்ணப்பித்துள்ளார். அவரின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளி ராமு
மாற்றுத்திறனாளி ராமு

இந்த நிலையில், சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவில் வசிக்கும் உறவினர் விஜயகுமார் என்பவர் ராமுவையும் அவரின் வயதான தாயையும் அழைத்துச் சென்று அரவணைத்து வருகிறார். விஜயகுமாருக்கும் கையின் விரல்கள் ஊனமாக இருப்பதால் வறுமையின் சுமையும் கூடியிருக்கிறது. இந்த நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு ராமுவை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு விஜயகுமார் வந்திருந்தார். கால் முட்டியைத் தேய்த்தபடி கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அரங்குக்குள் ராமு நகர்ந்துசென்றார்.

`சாப்பிடக்கூட வழியில்லை; உதவித்தொகை கொடுங்க சார்!’ -கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய மாற்றுத்திறனாளி

மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம், `மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு’ மனு அளித்தார். கலெக்டர் சண்முகசுந்தரம் பணி நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால் அவரைச் சந்திக்க முடியவில்லை. மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பரிசீலனை செய்வதாகக் கூறி ராமுவை அனுப்பிவைத்தார். கவலை தோய்ந்த முகத்துடன் உடலை வருத்திக்கொண்டு வெளியே நகர்ந்து வந்தவரால் பேச முடியவில்லை. இதுபற்றி, விகடன்’ இணையத்தில் மாற்றுத்திறனாளி ராமுவின் படங்களுடன் விரிவான செய்தியை நேற்று மாலை வெளியிட்டிருந்தோம்.

உதவிய இளைஞர்கள்
உதவிய இளைஞர்கள்

மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்தின் கவனத்துக்கும் மாலை 7.30 மணியளவில் நேரடியாகக் கொண்டு சென்று வலியுறுத்தினோம். உடனே, நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் நம்மிடம் உத்தரவாதம் கொடுத்தார். சொன்னதைப்போலவே, அடுத்த ஒரு மணி நேரத்தில் ராமுவுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையைப் பிறப்பித்தார் கலெக்டர். இரவு 9 மணியளவில், அதற்கான உத்தரவு நகலையும் நம்முடைய பார்வைக்கு அதிகாரிகள் வாட்ஸ்-அப்பில் அனுப்பிவைத்தனர். இதுபற்றி, மாற்றுத்திறனாளி ராமுவின் வீட்டுக்கு இரவு நேரத்திலேயே நேரடியாகச் சென்று தகவல் சொன்னோம்.

மிகவும் மகிழ்ச்சியடைந்த ராமுவும் அவரின் தாயும் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். அதுமட்டுமன்றி, சில தன்னார்வ அமைப்புகளும் ராமுவுக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளனர். சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தைச் சேர்ந்த ஐ.டி-யில் பணிபுரியும் தினேஷ் சரவணன் தலைமையிலான இளைஞர்கள் பாலகணேசன், மௌலிஷ், குமரேசன், கணபதி ஆகியோர் 6 மாதங்களுக்குத் தேவையான 5 மூட்டை அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கி அன்புக்கரம் நீட்டினர். மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கே தேடிச்சென்று இந்த உதவியை இளைஞர்கள் செய்தனர். மேலும், அரசு தரும் உதவித்தொகையுடன் சேர்த்து தங்கள் தரப்பிலும் ரூ.1000 உதவித்தொகையை ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கே வந்து வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

உதவிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம்
உதவிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம்

அதேபோல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதன் தலைவர் சோளிங்கர் என்.ரவி, 6 மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வீட்டுக்கே சென்று வழங்கினார். மேலும், மாதந்தோறும் மின் கட்டணம் உள்ளிட்ட உதவிகளையும் செய்வதாகக் கூறினார். அதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபுவும் இன்று ராமுவின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து, உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையைக் கொடுத்தார். அவரின் தாய்க்கும் மாதந்தோறும் விதவைக்கான உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். கலெக்டர் இன்று பணி நிமித்தமாக வெளியில் சென்றிருப்பதால் ராமுவை பின்னர் சந்திப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.