Published:Updated:

வேலூர்: `வாட்ஸ்அப்பில் கோரிக்கை!’ - புற்றுநோய் பாதித்த 5 வயதுச் சிறுவனுக்கு உதவிய கலெக்டர்

உதவி செய்த கலெக்டர் சண்முகசுந்தரம்
உதவி செய்த கலெக்டர் சண்முகசுந்தரம்

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ உதவிக்காக 1 லட்ச ரூபாயை வழங்கினார் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், கூலித்தொழிலாளி. இவரின் 5 வயது மகன் விஷ்வா, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறான். வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஷ்வாவின் மருத்துவச் செலவுக்காக சிறுகச் சிறுகச் சேர்ந்து வைத்திருந்த நகை, பணத்தைச் செலவழித்துள்ளனர்.

விஷ்வா
விஷ்வா

எனினும், புற்றுநோயிலிருந்துச் சிறுவனை பூரணமாக குணமடையச் செய்ய 5 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ராஜசேகர், தன் மகனைக் காப்பாற்றித் தருமாறு வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் வாட்ஸ்அப் மூலமாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.

`அந்த அம்மாவுக்கு பெரிய பதவி; எனக்கு சின்ன பதவியா?’ - வேலூர் கட்சித் தாவல் காமெடி

அந்தப் பதிவைப் பார்த்தவுடன் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உடனடியாக விசாரித்து தெரிந்துகொண்ட கலெக்டர் சண்முகசுந்தரம், சிகிச்சைக்கு உதவுவதாக உறுதியளித்தார். அதன்படி, இந்தியன் ரெட்கிராஸின் வேலூர் மாவட்ட கிளைச் சார்பில் 1 லட்ச ரூபாய்க்கான காசோலையை சிறுவனின் தந்தையை நேரில் வரவழைத்து வழங்கினார் கலெக்டர் சண்முகசுந்தரம்.

உதவிசெய்த கலெக்டர் சண்முகசுந்தரம்
உதவிசெய்த கலெக்டர் சண்முகசுந்தரம்

மேலும், சிறுவனின் குடும்ப வறுமையை அறிந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு மற்றும் தாட்கோ மூலம் கடன் உதவி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் செயலாளர் இந்தர்நாத் உட்பட பலர் கலந்துகொண்டனர். தன்னார்வலர்கள் மூலமாகவும் சிறுவனுக்குத் தேவையான மருத்துவச் செலவுகளைச் செய்ய மாவட்ட நிர்வாகம் முயன்றுவருகிறது.

கலெக்டரின் உடனடி உதவிக்கரம் சிறுவனின் பெற்றோரை நெகிழ்ச்சியடைய வைத்தது. ஆனந்தக் கண்ணீரில் அவர்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு