Published:Updated:

வேலூர்: `வாழ்நாளைக்கும் மறக்க மாட்டேன்’ - தாய், மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்

உதவி செய்த கலெக்டர் சண்முக சுந்தரம்
உதவி செய்த கலெக்டர் சண்முக சுந்தரம்

ஒரே நேரத்தில் இலவச வீடு, மாதாந்தர உதவித்தொகை, வேலை, பணம் போன்றவை கிடைத்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்துபோனார் கலைவாணி.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு 11 வயதில் ஓர் பெண் குழந்தை உள்ளது. வறுமையின் பிடியில் தவிக்கும் கலைவாணிக்குச் சொந்தமாக வீடு கிடையாது. வாடகை செலுத்தி தங்கவும் வசதி இல்லை. தன்னுடைய மகளுடன் அதே பகுதியில் உள்ள இடிந்துபோன பாழடைந்த கட்டடத்துக்குள் வசித்து வருகிறார். அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், கலைவாணியால் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய முடியவில்லை.

இடிந்த கட்டடத்துக்குள் தாய், மகள்
இடிந்த கட்டடத்துக்குள் தாய், மகள்

அதனால், அருகில் உள்ள மலைகளில் இருந்து சுண்டைக்காய் பறித்துவந்து வள்ளலார் பகுதியில் விற்பனை செய்கிறார். தினமும் 20 முதல் 50 ரூபாய்தான் வருமானம் கிடைக்கிறது. சில நாள்கள் அதுவும் இல்லை. கலைவாணியின் துயர நிலை குறித்து நேற்று முன்தினம் (27.07.2020) `வேலூர்: `இடிந்த கட்டடம்; தினமும் திக்... திக்..!' - வறுமையின் துயரத்தில் தாய், மகள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியைப் பார்த்த வேலூர் மாவட்டக் கலெக்டர் சண்முக சுந்தரம் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன்வந்தார்.

கலெக்டர் உத்தரவின் பேரில், இந்தியன் ரெட்கிராஸின் வேலூர் மாவட்டக் கிளைச் செயலாளர் இந்தர்நாத் அவர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளை எடுத்தார். ரெட்கிராஸ் மூலமாக மளிகைப் பொருள்கள், தாய்-மகளுக்குத் தேவையான புது ஆடைகள், பாத்திரங்கள், ரூ.5,000 ரொக்கப் பணம் என வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கலெக்டர் சண்முக சுந்தரம் இன்று நேரில் சென்று, அந்தப் பெண்ணுக்கு வழங்கினார்.

உதவி செய்த கலெக்டர் சண்முக சுந்தரம்
உதவி செய்த கலெக்டர் சண்முக சுந்தரம்

மேலும், வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாதம்தோறும் 1,000 ரூபாய் பெறுவதற்கான உதவித்தொகை ஆணையையும் வழங்கினார். அதுமட்டுமன்றி இன்ப அதிர்ச்சியாக வீடற்ற அந்தப் பெண்ணுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, அதில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டி கொடுக்கவும் தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்தார் கலெக்டர் சண்முக சுந்தரம். பெண்ணின் மகளையும் படிக்க வைக்க அறிவுறுத்தினார்.

ரெட்கிராஸ் செயலாளர் இந்தர்நாத் நடத்திவரும் ஹோட்டலிலும் கலைவாணிக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதோடு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் விகடன் வாசகர் சீதாராமன் என்பவர் மூலமாகவும் ரூ.5,000 ரொக்கப்பணம் கலைவாணிக்கு வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் இலவச வீடு, மாதாந்தர உதவித்தொகை, வேலை, பணம் போன்றவை கிடைத்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்துபோனார் கலைவாணி.

உதவித்தொகைக்கான ஆணை
உதவித்தொகைக்கான ஆணை

இதற்கான அனைத்து வேலைகளையும் முன்னெடுத்தவர் ரெட்கிராஸ் செயலாளர் இந்தர்நாத். உடன் இருந்து உதவியது சமூக ஆர்வலர் தினேஷ். உதவி கிடைத்த சந்தோஷத்தில் இருந்த பெண்ணும், ``விகடன் மூலம் கிடைத்த இந்த உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’’ என்று ஆனந்தக் கண்ணீரில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு