Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: `45 வயதுக்கு மேல் கட்டாய தடுப்பூசி; தவறினால் நிறுவனங்களுக்கு சீல்' - கலெக்டர் எச்சரிக்கை

தடுப்பூசி போட்டுக்கொண்ட 45 வயதுக்கு மேலான பெண்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 45 வயதுக்கு மேலான பெண்

45 வயதுக்கு மேற்பட்டோர் 16-ம் தேதிக்குள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தவறினால் பாரபட்சமின்றி அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து மீண்டும் அச்சுறுத்துகிறது. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மட்டுமே தொற்றிலிருந்து விடுபடுவதற்கான வழி என்கிறது சுகாதாரத்துறை. 'முதல் முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நான்கு வாரம் முடிந்தவுடன் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 8 வாரம் கழித்துகூட போட்டுக்கொள்ளலாம்' என்று அறிவுறுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தும் அதிகாரிகள்
தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தும் அதிகாரிகள்

மாவட்டத்திலுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி-கல்லூரி பேராசிரியர்கள், பொதுமக்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், பூ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பேருந்து-லாரி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதி ஊழியர்கள், துணிக்கடை ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 16-ம் தேதிக்குள் கோவிட் தடுப்பூசி செலுத்தி அதற்குரிய சான்றைக் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். தவறினால் பாரபட்சமின்றி அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கண்டுபிடிக்க வாக்காளர் பட்டியலை அலசி வருகிறது, மாவட்ட நிர்வாகம். இதன் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் நம்புகிறது. வேலூர் மாவட்டத்திலுள்ள 46 ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் மாநகராட்சி பகுதியிலுள்ள 10 நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பெட்லேண்ட் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், வேலூர் மாநகராட்சி உட்பட மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் மொபைல் மருத்துவக் குழுக்களும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட 45 வயதுக்கு மேலான நபர்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 45 வயதுக்கு மேலான நபர்

அதுமட்டுமன்றி, மாவட்ட நிர்வாகத்துடன் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து 18,000 பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்கான முகாமை நடத்தி வருகிறது. வரும் 18-ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறவிருப்பதால் லாரி, பேருந்து, ஆட்டோ, தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஊழியர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வங்கி ஊழியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தடுப்பூசி செலுத்தவும் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதே சமயம், கொரோனா முதல் அலையின்போது இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வரத் தொடங்கியுள்ளன. முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சமூக பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்திலுள்ள அனைத்து வாரச் சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தற்காலிகமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே காய்கறி விற்பனையை செய்துகொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு