Published:Updated:

`மீண்டும் தவறுசெய்த சி.எம்.சி மருத்துவமனை?’ -கடுமையாக எச்சரித்த வேலூர் கலெக்டர் #corona

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை
News
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

தொற்றுள்ள நபர்களை சி.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டாம். உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மூடப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார், வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்.

Published:Updated:

`மீண்டும் தவறுசெய்த சி.எம்.சி மருத்துவமனை?’ -கடுமையாக எச்சரித்த வேலூர் கலெக்டர் #corona

தொற்றுள்ள நபர்களை சி.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டாம். உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மூடப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார், வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை
News
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், ‘கொரோனா’ பாதிப்புக்குள்ளான 46 வயது நபர் கடந்த 7-ம் தேதி இரவு மரணமடைந்தார். அந்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தகவலை சி.எம்.சி நிர்வாகம், முன்கூட்டியே சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்ட அன்றுதான், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா உயிரிழப்பைத் தடுக்கத் தவறியதாக சி.எம்.சி நிர்வாகத்தைக் கடுமையாக எச்சரித்த மாவட்ட நிர்வாகம் 22 கட்டுப்பாடுகளை விதித்தது.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான மேலும் ஒரு நபரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ள சி.எம்.சி நிர்வாகம், அதுபற்றிய தகவலையும் மாவட்ட நிர்வாகத்திடம் தாமதமாகக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. உத்தரவை மீறும் வகையில் செயல்படும் இதுபோன்ற தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு வழக்கு தொடரப்படும் என்று மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் கொதிப்படைந்து கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களிடம் நோய்த் தொற்று குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு செல்லும்போது முழு ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வலி இருந்தால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டாம்.

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல்   அடக்கம் செய்யப்பட்டபோது
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது

அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுகி சிகிச்சை பெறவேண்டும். மீறி சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், நோய்த் தொற்றுள்ள நபர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்ட நபர்களைக் கடைசி நேரத்தில் சி.எம்.சி மருத்துவமனைக்கோ அல்லது வேறு தனியார் மருத்துவமனைகளுக்கோ அனுப்புவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கெனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், இதரப் பணியாளர்கள், உடன் வந்த உறவினர்கள், உடனிருந்த பிற நோயாளிகள் என அனைவரும் காலதாமதமின்றி உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

வேலூர் நகரப் பகுதியில் தொற்று கண்டறியப்பட்ட 16 பேர் வசித்துவந்த ஆர்.என்.பாளையம், முள்ளிப்பாளையம், கஸ்பா, சைதாப்பேட்டை, கொணவட்டம், சின்ன அல்லாபுரம், ஹாஜிபுரா (கருகம்புத்தூர்) போன்ற பகுதிகளில் வசிக்கும் அனைவரையும் பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இன்று (16-ம் தேதி) முதல் இந்த மாதம் இறுதி வரை முகாம்கள் தொடர்ந்து செயல்படும். அனைத்து மக்களும் மாவட்ட நிர்வாகத்துக்குத் துணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறியிருக்கிறார்.

சி.எம்.சி நிர்வாகம் தரப்பில் பேசினோம். "மற்ற தனியார் மருத்துவமனைகளுடன் சி.எம்.சி-யை தொடர்புப்படுத்த வேண்டாம். மக்கள் சளி, காய்ச்சல் இருந்தால் சின்ன சின்ன கிளினிக்கிற்கு சென்று பரிசோதனை செய்துகொள்கிறார்கள். தொற்று இருப்பது தெரியவந்தாலும் அரசு மருத்துவமனைக்கோ அல்லது சி.எம்.சி மருத்துவமனைக்கோ உடனடியாக வருவதில்லை. கடைசி நேரத்தில் அட்மிட் ஆகிறார்கள்.

வேலூர் சி.எம்.சி
வேலூர் சி.எம்.சி

பொதுவாக, தொற்று கண்டறியப்பட்ட உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். சி.எம்.சி அதை சரியாக பின்பற்றுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களை கடைசி நேரத்தில் சி.எம்.சி-க்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று தான் கலெக்டர் சொல்லியிருக்கிறாரே தவிர எங்களை குற்றம் சாட்டவில்லை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை கிடைக்காமல் போனால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பதில்லை. சி.எம்.சி-க்கு தான் கொண்டு வருகிறார்கள். மற்ற சில தனியார் மருத்துவமனைகளின் செயலால் அதிருப்தியான கலெக்டர், அவையெல்லாம் மூடப்படும் என்று எச்சரித்துள்ளார். சி.எம்.சி-யை அவர் குறை சொல்லவில்லை" என்று விளக்கமளித்தனர்.