Published:Updated:

`1 மணிநேரத்துக்குள் தகவல் வரவில்லையென்றால்?'-லாட்ஜ் உரிமையாளர்களை எச்சரித்த வேலூர் கலெக்டர்#corona

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

`லாட்ஜ்களில் தங்க வரும் நபர்களின் விவரங்களை ஒரு மணி நேரத்துக்குள் கலெக்டர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்’’ என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

‘கொரோனா’ வைரஸைத் தடுப்பதற்காக, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பொதுமக்களும் சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து நேற்று காலை முதல் இரவு வரை வீடுகளிலிருந்து வெளியில் வரவில்லை. கடைகளும் வணிக நிறுவனங்களும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன.

வேலூர் மார்க்கெட்
வேலூர் மார்க்கெட்

எப்போதும் பரபரப்பாக இருக்கும் வேலூர் சாலைகளும், வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. `பொதுமக்கள் அடுத்த சில நாள்களுக்கும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மாறாக, இன்று காலை முதல் பொதுமக்கள் கடை வீதிகளில் கூடியிருக்கிறார்கள்.

முகக்கவசம் அணியாமல் மிக அலட்சியமாகப் பெரும்பாலானோர் பொது இடங்களுக்கு வந்துசெல்கிறார்கள். இதனால், ‘கொரோனா’ குறித்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. உடல் ரீதியாக விலகலின் அவசியத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள்.

வேலூர் மாநகர சாலை
வேலூர் மாநகர சாலை

அதே சமயம், ‘‘லாட்ஜ்களில் தங்க வரும் வெளி நாடு மற்றும் வெளி மாநிலத்தவர்களின் விவரங்களை ஒரு மணி நேரத்துக்குள் கலெக்டர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். தவறினால், லாட்ஜ் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘லாட்ஜ்களில் தங்கும் நபர்களின் விவரங்களை ஒரு மணிநேரத்துக்குள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் 1077 மற்றும் 0416-2258016 ஆகியவற்றைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

லாட்ஜ்களில் அனுமதிக்கப்படும் நபர்களின் விலாசத்தை சரிபார்த்து, அந்தத் தகவலை முழுமையாகவும், எத்தனை நாள்கள் தங்கப்போகிறார்கள், எதற்காகத் தங்குகிறார்கள், அவர்களுடன் பயணம் செய்தவர்கள், ரத்த வகை போன்ற விவரங்களை போனில் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும். இதனைக் கடைப்பிடிக்காத லாட்ஜ்கள் மீதும் அதன் மேலாளர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு