Published:Updated:

`குழந்தை யாருடையது; எதற்காகப் பிச்சையெடுக்கிறீங்க?’ -அதிரடி காட்டிய வேலூர் கலெக்டர்

குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுக்கும் நபர்களைக் கண்டறிய வேலூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தையுடன் பிச்சையெடுக்கும் பெண்
குழந்தையுடன் பிச்சையெடுக்கும் பெண்

வேலூர் மாவட்டம் முழுவதும், கைக்குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுக்கும் வடமாநிலப் பெண்கள் நிறைய பேர் சுற்றித்திரிகிறார்கள். வெயில் சுட்டெரித்தாலும் மழை கொட்டித் தீர்த்தாலும் அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் குழந்தைகளைத் துன்புறுத்தும் வகையில் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையம் உட்படப் பொதுமக்கள் கூடும் பல இடங்களில் கையேந்துகிறார்கள்.

குழந்தையுடன் பிச்சையெடுக்கும் பெண்
குழந்தையுடன் பிச்சையெடுக்கும் பெண்

அந்தப் பெண்கள் யார், வேலூருக்கு வந்தது எப்படி... குழந்தைகள் அவர்களுடையதுதானா? குழந்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பும் பொதுமக்கள் அச்சமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், காட்பாடியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது, குழந்தையை வைத்துப் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஆந்திர மாநிலப் பெண்ணைப் பிடித்து விசாரித்தார்.

விசாரணை நடத்திய கலெக்டர் சண்முக சுந்தரம்
விசாரணை நடத்திய கலெக்டர் சண்முக சுந்தரம்

`நான், புத்தூர் பகுதியைச் சேர்ந்த மல்லேஸ்வரி. இந்தக் குழந்தை என்னுடையதுதான். எந்தவித வாழ்வாதாரமும் இல்லை’ என்றுகூறிய அந்தப் பெண்ணை, அரசு காப்பகத்தில் ஒப்படைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

தவிர, ``வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியில் சாலையோரமாக ஆந்திராவைச் சேர்ந்தவர்களும் இந்தி பேசும் வட மாநிலத்தவர்களும் குடிசையமைத்து தங்கியுள்ளனர். அவர்களும் குழந்தைகளை வைத்தும், வண்டியில் சாய்பாபா படத்தை வைத்தும் பணம் கேட்கிறார்கள்.

குழந்தையுடன் பிச்சையெடுக்கும் பெண்
குழந்தையுடன் பிச்சையெடுக்கும் பெண்

இதேபோல், அந்த மாவட்டம் முழுவதும் குழந்தைகளுடன் சுற்றித் திரியும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் என்ன தேவை என்பது குறித்த விவரங்களை உடனடியாகக் கணக்கெடுக்கவேண்டும்’’ என்று குழந்தைகள் நல குழுமத் தலைவர் சிவகலைவாணனுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.