Published:Updated:

`கூடுதல் விலையா... குண்டர் சட்டம் பாயும்!’ - வியாபாரிகளை எச்சரித்த வேலூர் கலெக்டர் #Lockdown

கலந்தாய்வுக் கூட்டம்
கலந்தாய்வுக் கூட்டம்

விவசாயிகள், தங்களின் விளைபொருள்களை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால், தகவல் தெரிவிக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில், அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் இருப்பில் உள்ளன. அப்படியிருக்க, லாக்டௌன் நேரத்திலும் காய்கறிகள், பருப்பு வகைகள், நவதானியப் பொருள்கள், பேக்கரி வகைகள் மற்றும் மளிகைப் பொருள்களை வியாபாரிகள் சிலர் கூடுதலான விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

இதுதொடர்பாக, கலெக்டர் சண்முக சுந்தரத்துக்கு புகார்கள் சென்றதையடுத்து, அவரின் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், காவல் துறையினர் கலந்துகொண்டனர்.

கலந்தாய்வுக் கூட்டம்
கலந்தாய்வுக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களுக்கு சீரான விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டது. எண்ணெய் பாக்கெட்டுகளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. எந்தக் கடையிலாவது பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால், அந்தக் கடையை மூடி 6 மாதங்களுக்கு சீல் வைக்கப்படும். கடையின் உரிமம் ரத்துசெய்யப்படுவதுடன் அதன் உரிமையாளர் மீதும் குண்டர் சட்டம் பாயும். இந்த இக்கட்டான சூழலில், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை நடுத்தர மக்களை மேலும் பாதிக்கச் செய்யக்கூடாது.

இவற்றைக் கண்காணிக்க, மாவட்டம் முழுவதும் சிறப்பு பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டு, பொருள்களைப் பதுக்கிவைத்தல், அதிக விலைக்கு விற்றல், கலப்படம் செய்தலைத் தடுக்கும் வகையில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்படும். விவசாயிகள், தங்களின் விவசாயப் பொருள்களை எங்கு வேண்டுமானாலும் தங்கு தடையின்றி எடுத்துச்செல்வதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவ டிஎஸ்பி பொற்செழியன், மாவட்ட பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலந்தாய்வுக் கூட்டம்
கலந்தாய்வுக் கூட்டம்

விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை பைக், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் கொண்டுசெல்லும்போது ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால், டிஎஸ்பி பொற்செழியனை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், அந்தந்தப் பகுதி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களையும் தொடர்புகொள்ளலாம்.

அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077, 0416-2258016, 9154153692 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம். இந்த எண்களில் அதிக விலைக்கு பொருள்களை விற்கும் கடைக்காரர்கள், பதுக்கி வைப்பவர்கள், கலப்படம் செய்பவர்கள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு