Published:Updated:

பார்க்கிங் சென்டரில் கட்டணக் கொள்ளை?! - வேலூர் மாநகராட்சி சர்ச்சை

மாநகராட்சி பார்க்கிங் சென்டர்
மாநகராட்சி பார்க்கிங் சென்டர்

வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான பார்க்கிங் சென்டரில், நிர்ணயிக்கப்பட்ட நான்கு ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, ஒரு பைக்கை நிறுத்த நாளொன்றுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

கடந்த சுதந்திர தின விழாவின்போது, சிறந்த மாநகராட்சிக்கான விருதை, வேலூர் மாநகராட்சிக்கு வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `மிக மோசமாக இருக்கும் இந்த மாநகராட்சிக்கு எதன் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது?’ என்று தி.மு.க எம்.எல்.ஏ-க்களும், வேலூர் மக்களும் கேள்வி எழுப்பி, கிண்டல் செய்தனர். ‘``ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடக்கிறது. அனைத்துப் பணிகளிலும் அதிகாரிகளின் துணையுடன் ஊழல் புரையோடிக்கிடக்கிறது’’ என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

இந்தநிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான பைக் பார்க்கிங்கிலும் அதிகாரிகளின் துணையுடன் ஒப்பந்ததாரர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பைக் பார்க்கிங்கில் நாளொன்றுக்கு ஒரு பைக்கை நிறுத்திவிட்டுச் செல்ல நான்கு ரூபாய்தான் கட்டணமாகப் பெற வேண்டும்.

வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி

ஆனால், 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் கூறப்படுகிறது. இந்த பார்க்கிங்குக்கு வெளியில் நினைவுத்தூண் ஒன்று இருக்கிறது. அதனருகில் எந்த வாகனங்களையும் நிறுத்தக் கூடாது என்று மாநகராட்சி நிர்வாகமே எச்சரிக்கைப் பலகையை பெரிதாக வைத்திருக்கிறது. இதனால், வெளியாட்கள் யாரும் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்துவது கிடையாது. அதிகாரிகளின் துணையுடன் ஒப்பந்தம் எடுத்தவரே நினைவுத்தூண் இடத்தை ஆக்கிரமித்து, நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்திவைத்திருக்கிறார். இதனால், அருகிலுள்ள பஜார் வியாபாரிகளும் தினந்தோறும் அவதிக்குள்ளாகிவருகிறார்கள். இடத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தமாறு புகார் சொல்லும் வியாபாரிகளை, போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் மிரட்டுவதாகவும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி பார்க்கிங் சென்டரில் கொடுக்கும் ரசீதில், `உதிரி பாகங்கள் உடைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல’ என்கிற வாசகத்தை அச்சிட்டிருக்கிறார்கள். இரவு நேரங்களில், பெட்ரோல் திருடுவதுடன், வாகன உதிரி பாகங்களும் திருடப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அருகில் வேறெங்கும் பார்க்கிங் சென்டர் இல்லாத காரணத்தால், மாநகரத்தை நோக்கி வரும் மக்கள் இந்த பார்க்கிங்கிலேயே பைக்கை நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்தப் புகார் குறித்து பார்க்கிங் சென்டரின் ஒப்பந்தாரர் தரப்பில் கேட்டபோது, ‘``இதெல்லாம் சகஜம் சார். நீங்க வேணா நிறுத்துங்க. காசெல்லாம் கொடுக்க வேணாம்’’ என்றவரிடம்,

வெளியில் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகள்
வெளியில் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகள்

‘``உங்களை நம்பி வண்டியை நிறுத்திவிட்டுப் போறங்களைப் பற்றி கவலையில்லையா... 30 ரூபாய் கட்டணம் வசூலிப்பது ஒப்பந்த முறைக்கு எதிரானது என்று தெரியுமா?’’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள், ‘``அதிகாரிகளுக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்குது’’ என்றனர்.

இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரனிடம் விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அவர், ‘``இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம்தேதிதான் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பார்க்கிங் சென்டரை அசோக் என்பவர் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். அவரிடம், சைக்கிளுக்கு இரண்டு ரூபாயும், பைக்குக்கு நான்கு ரூபாயும்தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. எனக்கொரு ரிப்போர்ட் மட்டும் கொடுங்க, அந்த ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிடுகிறேன். ஒப்பந்ததாரர் செய்யும் தவறுக்கு மாநகராட்சி பொறுப்பேற்காது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு