Published:Updated:

வேலூர்: இரவு முழுவதும் தவித்த குழந்தைகள்! -வி.ஏ.ஓ சஸ்பெண்ட்; ஆட்சியரின் விளக்கம்

ஆட்சியர்
ஆட்சியர்

ஆட்சியர் அலுவலகம் அருகில் இரவு முழுவதும் நான்கு குழந்தைகளுடன் தம்பதியர் தவித்த சம்பவத்தில் வி.ஏ.ஓ-வைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார், வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்துவந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாலை மனு கொடுக்க வந்தனர். மாலை நேரம் என்பதால் ஆட்சியரைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். எங்கு செல்வது எனத் தெரியாமல் ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே சாலையோரம் நான்கு குழந்தைகளுடன் இருவரும் தங்கினர்.

குழந்தைகளுடன் சாலையோரம் தங்கிய தம்பதி
குழந்தைகளுடன் சாலையோரம் தங்கிய தம்பதி

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாளச் சான்றிதழ்கள் இல்லாததால், சுடுகாடுப் பகுதியிலேயே இத்தனை ஆண்டுக்காலமாக தார்ப்பாய் போர்த்திய சிறிய கொட்டகையில் வசித்துவந்த நிலையில் மாற்று இடத்தில் வீடு கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததாகக் கூறி முருகன், பச்சையம்மாள் தம்பதியர் கண்ணீர் வடித்தனர்.

செருப்பைத் தலையணைபோல் வைத்து குழந்தைகள் தூங்கியது காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்தது. நள்ளிரவு முழுவதும் குழந்தைகளுடன் கொசுக்கடியிலேயே மண் தரையில் படுத்திருந்த அவர்களை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அங்கிருந்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, `விகடன்’ இணையத்தில் இன்று காலை செய்தி வெளியானது.

ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

இதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ-வைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

இது குறித்து, ஆட்சியரிடம் கேட்டபோது, ``இதையெல்லாம் வி.ஏ.ஓ-க்கள்தான் பார்த்து என் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்தால் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ-வை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். குழந்தைகளுடன் தவித்த தம்பதியரை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும்’’ என்று உறுதி அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு