Published:Updated:

`டெல்லியில் நரக வேதனை அனுபவித்தேன்!’ - உருளைக்கிழங்கு லாரியில் ஊர் திரும்பிய வேலூர் சைக்கிளிஸ்ட்

நரேஷ்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற தாய்
நரேஷ்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற தாய்

டெல்லியில் தவித்த வேலூர் சைக்கிளிஸ்ட் உருளைக் கிழங்கு ஏற்றிவந்த லாரியில் வேலூர் வந்துசேர்ந்தார். வீடு திரும்பிய அவரைக் கண்ணீர் மல்கத் தாய் கட்டியணைத்து வரவேற்ற சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வேலூர் சங்கரன்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், தனியார் பேருந்து ஓட்டுநர். இவரின் மகன் நரேஷ்குமார் (28), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை செய்துவருகிறார். சிறு வயதிலிருந்தே சைக்கிள் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட நரேஷ்குமார், `சைக்கிள்’ மூலம் உலக சாதனைகளை நிகழ்த்துவதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

வேலூர் சைக்கிளிஸ்ட் நரேஷ்குமார்
வேலூர் சைக்கிளிஸ்ட் நரேஷ்குமார்

நதிகள் இணைப்பு, மழைநீர் சேமிப்பு, மனித நேயம் காத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கெனவே பலமுறை சைக்கிள் பேரணி நடத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு, மனித நேயத்தை வலியுறுத்தி 3,846 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்தினார். 11 நாள்கள் 21 மணி நேரம் 57 நிமிடங்கள் 2 விநாடிகளில் 5 நாடுகளின் எல்லைகளைத் தொட்டு `கின்னஸ்’ சாதனை படைத்தார் நரேஷ்குமார்.

தவிர, தேசிய அளவிலான `இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, `லிம்கா’ சாதனைப் புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளார். தற்போது, மீண்டுமொரு `கின்னஸ்’ சாதனைக்காகச் சாலை விதிகளை வலியுறுத்திக் கடந்த 16-ம் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து 6,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார் நரேஷ்குமார். கலெக்டர் சண்முக சுந்தரம் கொடியசைத்து அவரின் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

டெல்லியில் சாலையோரம் ஓய்வெடுத்தபோது...
டெல்லியில் சாலையோரம் ஓய்வெடுத்தபோது...

சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு வழியாக மொத்தம் 18 நாள்களில் 6,000 கிலோ மீட்டர் கடந்து வேலூரிலேயே பயணத்தை நிறைவு செய்ய திட்டம் வகுந்திருந்தார். இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், நரேஷ்குமார் தனது பயணத்தைத் தொடர முடியாமல் டெல்லியில் தவிப்புக்குள்ளாகினார்.

9 நாள்கள் 14 மணி நேரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு 3,300 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பயணத்தை ரத்துசெய்தார். ஆனால், மீண்டும் தமிழகம் திரும்புவதில் அவருக்குச் சிக்கல் ஏற்பட்டது. `கொரோனா’ அச்சம் காரணமாக விடுதிகளில் தங்க அவரை யாரும் அனுமதிக்கவில்லை. குடிக்கத் தண்ணீர்கூட தர மறுத்துள்ளனர். ஹோட்டல்களும் அடைக்கப்பட்டிருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார். பூட்டப்பட்டிருந்த கடைகளுக்கு அருகில் படுத்து தூங்கினார்.

டெல்லியில் சாலையோரம் ஓய்வெடுத்தபோது...
டெல்லியில் சாலையோரம் ஓய்வெடுத்தபோது...

நரேஷ்குமாருக்கு உதவியாக உடன் பயணித்த அவரின் நண்பர்கள் செங்கல்வராயன், கார்த்தி ஆகியோரும் செய்வதறியாமல் திகைத்தனர். பின்னர், ஆக்ராவில் உள்ள லாரி அலுவலகத்துக்குச் சென்று உதவி கேட்டனர். அங்கிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் நரேஷ்குமாரையும் அவருடன் இருந்தவர்களையும் அரவணைத்து உணவு வழங்கினர்.

27-ம் தேதி உருளைக்கிழங்கு ஏற்றி வந்த சரக்கு லாரியில் சைக்கிளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். பல மாநிலங்களில் கெடுபிடிகளைக் கடந்து 2,800 கிலோ மீட்டர் தூரம் லாரியிலேயே பதற்றத்துடன் பயணம் செய்தனர். மூன்று நாள்களுக்குப் பிறகு, 29-ம் தேதி வேலூர் வந்து சேர்ந்தனர். வீட்டுக்குச் சென்ற நரேஷ்குமாரை அவரின் தாய் கண்ணீர் மல்கக் கட்டியணைத்து வரவேற்றார். ஆரத்தி எடுத்து மகனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

உணவளித்து உதவி செய்த லாரி ஓட்டுநர்கள்
உணவளித்து உதவி செய்த லாரி ஓட்டுநர்கள்

கடினமான இந்தப் பயண அனுபவம் குறித்து நம்மிடம் பேசிய நரேஷ்குமார், ``இப்படியெல்லாம் நடக்கும்னு நான் கனவுலகூட நினைச்சிப் பார்க்கல. கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னரே என்னுடைய பயணத்தைத் தொடங்கிட்டேன். நரக வேதனையை அனுபவச்சிருக்கேன். அனைத்து மாநில எல்லைகளிலும் 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் உள்ளன. லாரிகளிலும் ரெண்டு பேருக்கு மேல் யாரையும் அனுமதிக்கல.

நான் சைக்கிளிஸ்ட் என்பதால், அதற்கான ஆவணங்களைக் காண்பித்து சரக்கு லாரியில வந்து சேர்ந்திருக்கிறேன். வர வழியில், கூலித் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமா மூட்டையைத் தூக்கிக்கிட்டு சொந்த ஊருக்குப் போயிட்டு இருந்தாங்க. பல மொழி பேசுற மக்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. அரசின் நடவடிக்கை சரிதான். அதைக் குறை சொல்ல முடியாது.

நரேஷ்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற தாய்
நரேஷ்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற தாய்

நானும் என்னுடன் வந்த இரண்டு பேரும் காய்ச்சல் பரிசோதனைக்குப் பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டோம். நாங்கள் வந்து சேர்ந்த தகவலை கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்தோம். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், குடும்பத்துடன் சேராமல் வீட்டு மாடியில் உள்ள அறையில் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம். நாங்கள் பத்திரமாக வந்து சேரணும் என்று எங்களுக்காக வேண்டிக்கிட்ட வேலூர் மக்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு