Published:Updated:

`தண்ணி தர மறுக்கிறார்கள்; ஊர் திரும்ப முடியல!’ -3,300 கி.மீ தூரத்தில் தவிக்கும் வேலூர் சைக்கிளிஸ்ட்

வேலூர் சைக்கிளிஸ்ட் நரேஷ்குமார்
வேலூர் சைக்கிளிஸ்ட் நரேஷ்குமார்

சாலை விதிகளை வலியுறுத்தி 6,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட வேலூர் இளைஞர், டெல்லியில் சிக்கித் தவிக்கிறார். பயணத்தை ரத்து செய்த அவரால், மீண்டும் தமிழகம் திரும்ப முடியவில்லை.

வேலூர் சங்கரன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், தனியார் பேருந்து ஓட்டுநர். இவரது மகன் நரேஷ்குமார் (28), பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை செய்துவருகிறார். சிறு வயதிலிருந்தே சைக்கிள் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட நரேஷ்குமார், ‘சைக்கிள்’ மூலம் உலக சாதனைகளை நிகழ்த்துவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

நரேஷ்குமார்
நரேஷ்குமார்

நதிகள் இணைப்பு, மழைநீர் சேமிப்பு, மனித நேயம் காத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கெனவே பலமுறை சைக்கிள் பேரணி நடத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு, மனித நேயத்தை வலியுறுத்தி 3,846 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்தினார். 11 நாள்கள் 21 மணி நேரம் 57 நிமிடங்கள் 2 விநாடிகளில், 5 நாடுகளின் எல்லைகளைத் தொட்டு கின்னஸ் சாதனை படைத்தார் நரேஷ்குமார்.

தவிர, தேசிய அளவிலான ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘லிம்கா’ சாதனைப் புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளார். தற்போது, சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கடந்த வாரம் திங்கட்கிழமை, வேலூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து 6,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார் நரேஷ்குமார். கலெக்டர் சண்முக சுந்தரம் கொடியசைத்து அவரின் பயணத்தை தொடங்கி வைத்தார்.

நரேஷ்குமார்
நரேஷ்குமார்

சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு வழியாக மொத்தம் 18 நாள்களில் 6,000 கிலோ மீட்டர் கடந்து பயணத்தை வேலூரிலேயே நிறைவு செய்ய திட்டம் வகுந்திருந்தார். இந்த நிலையில், ‘கொரோனா’ பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால் நரேஷ்குமார் தனது பயணத்தைத் தொடர முடியாமல் டெல்லியில் தவித்துவருகிறார்.

9 நாள்கள் 14 மணி நேரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு 3,300 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த நிலையில், பயணத்தை ரத்துசெய்துள்ளார் நரேஷ்குமார்.

டெல்லியிலிருந்து நம்மிடம் போன் மூலம் பேசிய அவர், ‘‘கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று காவல் துறையினர் வலியுறுத்தினார்கள். அனைத்துச் சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 நாள்களில் 2,500 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருந்தால், வீட்டுக்கே வந்து சேர்ந்திருப்பேன். வேலூரில் தொடங்கி சென்னை வழியாக ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், பீகார், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் வரை பயணித்தேன்.

வேலூர் சைக்கிளிஸ்ட் நரேஷ்குமார்
வேலூர் சைக்கிளிஸ்ட் நரேஷ்குமார்

அந்த மாநிலங்களிலிருந்தும் என்னால் வெளியில் வர முடியவில்லை. அங்கு தங்குவதற்கு யாரும் அனுமதிக்கவில்லை. தமிழகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஒரு லாரி அலுவலகத்தில் பேசியுள்ளேன். அதில், சைக்கிளை ஏற்றிவிட்டு தமிழகம் வந்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன். குடிக்கத் தண்ணீரும் கொடுக்க மறுக்கிறார்கள்.

இரண்டு நாள்களாக பிஸ்கட் மட்டும்தான் சாப்பிட்டேன். நேற்றிரவு விடுதிகளில் அறை கொடுக்க மறுத்ததால், பூட்டப்பட்டிருந்த கடை முன் படுத்துத் தூங்கினேன். விடியற்காலையில், போலீஸார் எழுப்பித் துரத்தி விட்டனர். எப்படியாவது, தமிழகம் வந்துவிட நினைக்கிறேன்’’ என்றார் கவலை தோய்ந்த குரலுடன்.

அடுத்த கட்டுரைக்கு