Published:Updated:

`சிறப்பு ரயில்; உற்சாகத்தில் 9,000 பேர்!’ -வெளிமாநில நெருக்கடியைச் சமாளிக்கும் வேலூர்

சொந்த ஊர் திரும்பும் வெளிமாநிலத்தவர்கள்
சொந்த ஊர் திரும்பும் வெளிமாநிலத்தவர்கள்

சிறப்பு ரயிலில் பயணிப்பது குறித்து முரணான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதால் பக்கத்து மாவட்டங்களில் உள்ள வெளிமாநிலத்தவர்களும் சாரை சாரையாக அணிவகுத்து வேலூருக்கு வருகிறார்கள்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் பொது முடக்கம் காரணமாக மீண்டும் ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. அதேபோல், கூலி வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்களும் உணவு கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகினர். இப்படி மட்டும் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட வெளிமாநிலத்தவர்கள் வேலூரில் தங்கியிருக்கிறார்கள். ஆன்லைன் மூலம் இவர்களின் விவரங்கள் பெறப்பட்டு இ-பாஸ் வழங்கப்படுகின்றன.

காட்பாடியிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில்
காட்பாடியிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில்

முதல் சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 பேர் காட்பாடியிலிருந்து கடந்த 6-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டாவது சிறப்பு ரயில் மூலம் மேலும் 1,131 பேர் அதே ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 8-ம் தேதி இரவு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, மூன்றாவது சிறப்பு ரயில் மூலம் பீகாரைச் சேர்ந்த 1,139 பேர் நேற்றிரவு இதே காட்பாடியிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரயில் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா வரை செல்கிறது.

இதேபோல், வேலூரில் தங்கியிருந்த ஒடிசாவைச் சேர்ந்த 63 பேரை கலெக்டர் சண்முகசுந்தரம் அரசு பேருந்துகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று மாலை அனுப்பி வைத்தார். அங்கிருந்து சிறப்பு ரயிலில், கூடுதலான பயணிகளுடன் இவர்களும் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தொடர்ந்து, மேற்கு வங்கம் உட்படப் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் நாளை (11-ஆம் தேதி) முதல் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

சிறப்பு ரயிலுக்குள் அமர்த்தப்படும் பயணிகள்
சிறப்பு ரயிலுக்குள் அமர்த்தப்படும் பயணிகள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் மூன்றாயிரம் பேர் வேலூரில் தங்கியுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன. அவர்களை விரைவாக மேற்கு வங்கத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மேற்கு வங்க தலைமைச் செயலாளர் தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக, இரண்டு மாநில அரசுகளுக்கும் பாலமாக இருந்து ஆலோசனை வழங்கியது, தமிழகத்தைச் சேர்ந்த மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்.

மேற்கு வங்க அரசின் தொடர்பினை விரைவுபடுத்துவதற்காக பாலசந்திரனிடம், தமிழக சுற்றுலா மேம்பாட்டு ஆணையர் ராஜேஷ் உதவிக் கோரினார். உடனே மேற்கு வங்க அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு பேசினார் பாலசந்திரன். அதன் பிறகே, வேலூரிலிருந்து மேற்கு வங்க நோயாளிகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. சிறப்பு ரயில்களின் கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கவில்லையென்றால் மொத்தச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. இதற்கான நிதியும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்டிரலுக்கு பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து
சென்டிரலுக்கு பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து

இந்த நிலையில், சிறப்பு ரயில்களில் பயணப்படுவது குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இதனால், ஆன்லைனில் விண்ணப்பிக்காமலும் சரியான ஆவணங்கள் இல்லாமலும் அருகில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தங்கியிருக்கும் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நடைபயணமாக வேலூருக்கு வருகிறார்கள்.

ஆன்லைன் மூலமாக இ-பாஸ் பெற்ற நபர்களிடம் டேட்டா ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படியிருக்க, நடைபயணமாகப் பக்கத்து மாவட்டங்களிலிருந்து புறப்பட்டுவந்து அவதிப்பட வேண்டாம். சிறப்பு ரயிலில் பயணிப்பது குறித்து தவறான தகவல்களையும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று வேலூர் மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு