Published:Updated:

முதல்வர் வருகை:`திடீர் சாலை; சசிகலா போஸ்டர் கிழிப்பு!’ - வேலூர் அட்ராஸிட்டி

புதுப்பிக்கப்பட்ட சாலை
புதுப்பிக்கப்பட்ட சாலை

அந்த போஸ்டர்களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, `தமிழகத்தின் விடிவெள்ளியே...’ என்ற வசனத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். வேலூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வேலூர் வருகிறார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்ய உள்ள முதலமைச்சர், மூன்று மாவட்டங்களுக்கான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதற்காக, வேலூர் கலெக்டர் அலுவலகம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

அகற்றப்படும் வேகத்தடை
அகற்றப்படும் வேகத்தடை

முதலமைச்சர் வருகையையொட்டி, போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்திலிருந்து அருகிலுள்ள எஸ்.பி அலுவலகம் வரையிலான தார்ச்சாலை நேற்று இரவுக்குள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க பிரமுகரான சத்துவாச்சாரியைச் சேர்ந்த சி.கே.சிவாஜிக்குச் சொந்தமான தார் பிளான்ட் மூலமாக அவசரகதியாக புதிய சாலையை அமைத்துள்ளனர். சாலையின் தரம்கூட பரிசோதிக்கப்படவில்லை.

முதலமைச்சரின் கார் வரும் சாலையிலுள்ள பெரும்பாலான வேகத் தடைகளும் உடைத்து அகற்றப்பட்டுள்ளன. புழுதித் துகள்களை தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு துடைத்து சாலையை பளிச்சிட வைத்துள்ளனர். அதேபோல், சிறுபாலங்கள், மேம்பாலங்களின் உறுதித்தன்மையையும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பரிசோதனை செய்தனர். அதிகார மட்டத்தில் இப்படியென்றால், ஆளும்கட்சியினரின் அட்ராஸிட்டியையும் தாங்க முடியவில்லை.

போஸ்டர் யுத்தம்
போஸ்டர் யுத்தம்

`சின்னம்மா, சிங்கப் பெண்ணே...’ என்ற வசனத்துடன் சசிகலாவின் சுவரொட்டியை அ.ம.மு.க-வினர் வேலூர் மாநகரின் பல இடங்களில் ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டர்களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, `தமிழகத்தின் விடிவெள்ளியே!’ என்ற வசனத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். வேலூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

``இந்தச் சுதந்திர தின விழாவில், சிறந்த மாநகராட்சிக்கான விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் வருகைக்காகத் தூய்மைப் பணிகளை இப்போதுதான் செய்கிறார்கள். அதற்கு முன் மாநகரம் எந்த நிலையில் இருந்தது என்று எல்லோருக்குமே தெரியும். எதன் அடிப்படையில் சிறந்த மாநகராட்சிக்கான விருதைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. நடப்பதையெல்லாம் பார்த்து, `தாங்க முடியல குருநாதா..?’ என்று கிண்டலடிக்கிறார்கள் வேலூர் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு