Published:Updated:

கரம் கொடுத்த விகடன்; கண்ணீர் துடைத்த வேலூர் ஆட்சியர்; சுகந்திக்கு இலவச வீட்டுமனையும் கிடைத்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

``எங்க கண்ணீரைத் துடைக்க முதல்ல வந்தது ஜூனியர் விகடன் பத்திரிகை. வாழலாமா, வேணாமானு நினைச்சுக்கிட்டிருந்த எங்க வாழ்க்கை ஒரே நாளில் மாறிடுச்சு. கரம் கொடுத்த விகடனுக்கும் துயர் துடைத்த எல்லாருக்கும் நன்றி” என்று கண்ணீரோடு நெகிழ்கிறார் சுகந்தி!

4.08.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ``ஒரு முறையாவது அம்மானு கூப்பிடுங்க செல்லங்களா!’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். வேலூர் கழிஞ்சூரில் ஒரு சிறிய வாடகை வீட்டில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தாய், சுயநினைவில்லாத கணவர், மனவளர்ச்சி குன்றிய இரண்டு பிள்ளைகள், வயதான மாமனார், மாமியார் ஆகியோரை அரவணைத்தபடி வறுமையில் போராடிக்கொண்டிருந்த சுகந்தியின் துயரம் பற்றி எழுதியிருந்தோம். சுகந்தி அனுபவித்துவந்த துயரத்திலும், அவர் காட்டிவரும் அப்பழுக்கற்ற அன்பிலும் நெகிழ்ந்த வாசகர்களிடமிருந்து அவரது குடும்பத்துக்கு உதவிகள் குவிந்தன.

ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை
ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை

இதழ் வெளியான ஜூலை 31-ம் தேதி காலையிலேயே, உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது அந்தக் கட்டுரை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் தொடங்கி சேலம், பெங்களூரு எனப் பல்வேறு இடங்களிலிருந்தும் உதவிக்கரங்கள் நீளத் தொடங்கின. கட்டுரையை வாசித்த கையோடு வி.ஐ.டி பல்கலைக்கழகத் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், ``அந்தக் குடும்பத்துக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய வி.ஐ.டி தயாராக இருக்கிறது” என்று நம்பிக்கை கொடுத்தார். வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாதந்தோறும் அந்தக் குடும்பத்துக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை தர முன்வந்தார். சத்துவாச்சாரியைச் சேர்ந்த சமூக சேவகர் தினேஷ் சரவணன், 2,000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார்.

பெங்களூரில் வசிக்கும் முத்துக்குமரன் 6,000 ரூபாயை உடனடியாக அனுப்பினார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜி.ஆர்.டி ஜுவல்லரி நகைக்கடை சார்பிலும் மாதந்தோறும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. இவர்களைத் தவிர விகடன் வாசகர்கள் பலரிடமிருந்தும் பணமாகவும் பொருளாகவும் உதவிகள் கிடைத்துவருகின்றன. தமிழக அரசுத் தரப்பிலும் உடனடியாக நிவாரணம் கிடைத்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், காட்பாடி தாசில்தார் தலைமையிலான டீம் ஒன்று சுகந்தியின் வீட்டுக்குச் சென்றது. குடும்ப நிலவரத்தை நேரில் பார்த்தவர்கள், சுகந்தி வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்கி, அரசுத் திட்டத்தில் வீடுகட்டித் தருவதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம், தையல் மெஷின் வழங்கியபோது...
ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம், தையல் மெஷின் வழங்கியபோது...

எல்லாவற்றையும்விட ஆறுதல் தரக்கூடிய தீர்வாக, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்துறை அதிகாரிகளை சுகந்தியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அப்போது, சுகந்தியிடம் அலைபேசியில் பேசிய ஷில்பா, ‘``அரசு மருத்துவமனையிலேயே இரு குழந்தைகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும். முதற்கட்டமாக ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமும், தையல் மெஷினும் வழங்கப்படும். விரைவில், உங்களுக்கு சத்துணவுத்துறையில் பணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்’’ என்று உறுதியளித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுநாளே (ஆகஸ்ட் 2-ம் தேதி), சுகந்திக்கு 50,000 ரூபாயையும், தையல் மெஷினையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஆகியோரின் ஆணைப்படி, திருமதி சுகந்திக்கு உதவிகள் வழங்கப்படுவதாக’ குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்தும் 08.08.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், `எங்க வாழ்க்கை ஒரே நாளில் மாறிடுச்சு! - களமிறங்கிய ஜூ.வி... உடனடியாக உதவிக்கரம் நீட்டிய அரசு!’ என்ற தலைப்பில் ஒரு அப்டேட் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

இந்த நிலையில், சுகந்திக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை வழங்கினார். கழிஞ்சூரில் ஒரே அறையுடைய சிறிய வாடகை வீட்டில்தான் சுகந்தியின் குடும்பத்தினர் மொத்தப் பேரும் தங்கியிருக்கின்றனர். சேனூர் பகுதியில் இலவசமாக வீட்டுமனை வழங்கி அதில் அரசுத் திட்டத்தின்கீழ் வீடுகட்டித் தரவும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். தனது இரண்டு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சுகந்தி, மாவட்ட ஆட்சியரிடமிருந்து வீட்டுமனைப் பட்டாவைப் பெற்றுக்கொண்டார்.

ஒரு தாயின் வலி உணர்ந்து, அவரின் துயர் துடைக்க முன்வந்த விகடன் வாசகர்கள், அந்தக் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்துகொடுத்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோருக்கு சுகந்தியும் அவருடைய குடும்பத்தின்ரும் கண்ணீர்மல்க நன்றி கூறினர். ``எங்க கண்ணீரைத் துடைக்க முதல்ல வந்தது ஜூனியர் விகடன் பத்திரிகை. வாழலாமா, வேணாமானு நினைச்சுக்கிட்டிருந்த எங்க வாழ்க்கை ஒரே நாளில் மாறிடுச்சு. கரம் கொடுத்த விகடனுக்கும் துயர் துடைத்த எல்லாருக்கும் நன்றி” என்று கண்ணீரோடு நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் சுகந்தி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு