Published:Updated:

`சொத்துகள் பறிப்பு; திருடன் பட்டம்!’ -மகனால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கதறிய முன்னாள் ராணுவ வீரர்

முன்னாள் ராணுவ வீரர் சொக்கலிங்கம்
முன்னாள் ராணுவ வீரர் சொக்கலிங்கம்

`திருடன்’ பட்டம் கட்டி வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாக மகன் மீதே கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார், வேலூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்.

வேலூர் இடையன்சாத்து கானாச்சாரி நகரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (85). முன்னாள் ராணுவ வீரர். இவருக்குத் தியாகராஜன் என்ற ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். தியாகராஜனும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம்
வேலூர் கலெக்டர் அலுவலகம்

இந்த நிலையில், தந்தை சொக்கலிங்கத்தை ‘கடைசிக் காலம் வரை பார்த்துக்கொள்கிறேன்’ எனக்கூறி அவரின் பெயரில் உள்ள காலி மனை மற்றும் 2 வீடுகள் உட்பட அனைத்துச் சொத்துகளையும் மகன் தியாகராஜன் `தான செட்டில்மென்ட்’டாக எழுதி வாங்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு, ‘வயதானவர்’ என்றும் பார்க்காமல் தன்னை அடித்து வீட்டை விட்டுத் துரத்தியதாக மகன் மீது குற்றம்சாட்டுகிறார் சொக்கலிங்கம். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரைச் சந்தித்து புகார் மனு கொடுப்பதற்காக, `ஆக்சிஜன்’ சிலிண்டர் பொருத்திய ஆட்டோவில் சொக்கலிங்கம் வந்திருந்தார்.

சொக்கலிங்கம்
சொக்கலிங்கம்

நம்மிடம் பேசிய அவர், ‘என் சொத்துகளை ஏமாற்றிப் பறித்துக்கொண்ட என் மகன் என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார். நான், சம்பாதித்த சொத்துகளை திரும்பக் கேட்டதற்கு என் மீதே திருட்டுப் பட்டம் சுமத்தி காவல் நிலையத்தில் பொய் வழக்குப் பதியச் சொல்கிறார்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் விதி 23-ன் கீழ் நான் பலமுறை புகார் மனு கொடுத்துவிட்டேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு முதல் நோய் வாய்ப்பட்டுள்ளேன். பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ராணுவ வீரர் சொக்கலிங்கம்
முன்னாள் ராணுவ வீரர் சொக்கலிங்கம்

மருத்துவச் செலவுக்காக மட்டும் மாதந்தோறும் 35 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. என் ஓய்வூதியமும் போதவில்லை. யாரும் கடனும் கொடுப்பதில்லை. இப்படியிருக்க என்னால் உயிர் வாழ்வது கடினம். மகனிடமிருந்து சொத்துகளை மீண்டும் வாங்கிக்கொடுங்கள் அல்லது அவரையே மருத்துவச் செலவுகளை ஏற்கச் சொல்லுங்கள்’ என்றார் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு