Published:Updated:

‘பசிக் கொடுமையால் வாடும் 200 குடும்பங்கள்!’ -நிலைகுலைந்த மலைக் கிராம மக்கள் #corona

மருத்துவப் பரிசோதனை
மருத்துவப் பரிசோதனை

அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்குச் சென்று ஊர் திரும்பிய வேலூர் மலை கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பசிக் கொடுமையால் தவிக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 19 பேர், மூன்று மாதங்களுக்கு முன் மும்பையில் உள்ள திராட்சை தோட்டத்தில் கூலி வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஊரடங்கு நடவடிக்கையால், வேலையிழந்த அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.

வேலூர் அரசு மருத்துவமனை
வேலூர் அரசு மருத்துவமனை

பின்னர், ஒரு வழியாகச் சரக்கு லாரியில் ஏறி மூன்று நாள்களுக்கு முன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தனர். சுகாதாரத் துறையினர் அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு ‘கொரோனா’ அறிகுறியில்லை என்பது உறுதியானது.

அதையடுத்து, கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 19 பேரிடமும் விசாரணை முடிவுற்ற பிறகு அவரவர் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ‘வீடுகளிலிருந்து வெளியில் வரக் கூடாது. குடும்பத்தினருடன் எவ்வித தொடர்பும் வைக்கக் கூடாது’ என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதேபோல், வேலூரை அடுத்த குருமலை, நச்சிமேடு, வெல்லக்கல், பீஞ்ச மந்தை, ஜார்தான் கொல்லை, பாலாம்பட்டு, கீழ்கொத்தூர், அப்புக்கல் உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கூலி வேலைக்காகக் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சமீபத்தில் மலைக் கிராமங்களுக்கு திரும்பிய அவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டனர். உணவுப் பொருள்கள் வாங்க பணம் இல்லாததால் பசியின் கொடுமையில் தவித்து வருகிறார்கள். தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நந்தகுமார் எம்.எல்.ஏ
நந்தகுமார் எம்.எல்.ஏ

இந்த மலைக் கிராமங்கள் அனைத்தும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் அடங்கியிருக்கின்றன. அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். நம்மிடம் பேசிய அவர், ``மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு