Published:Updated:

`தவறான தகவலைப் பரப்புகிறார்கள்!’ -ஃபேஸ்புக்கில் போலி கணக்கால் கொதிக்கும் கதிர் ஆனந்த் எம்.பி #corona

ஃபேஸ்புக் போலி கணக்கு
ஃபேஸ்புக் போலி கணக்கு

ஃபேஸ்புக்கில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் பெயரில், போலி கணக்கு தொடங்கி, தவறான தகவலைப் பரப்பிய நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகிறார்கள்.

‘கொரோனா’ நோய்த் தடுப்புப் பணிகளுக்காக, தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை, வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் 28-ம் தேதி நேரில் சந்தித்து வழங்கினார்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

இதனிடையே, ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் கதிர் ஆனந்த் பெயரில் தொடங்கப்பட்டிருந்த கணக்கிலிருந்து ஓர் அறிவிப்பு வெளியானது. அதில், ‘‘வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டுக்கான முழு நிதியையும் பல்வேறு திட்டங்களுக்காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துவிட்டேன்.

அந்தப் பணிகள் நடைபெற்றுவருவதால், ‘கொரோனா’ தடுப்புக்காக தன்னுடைய தொகுதி மேம்பாட்டிலிருந்து நிதியை ஒதுக்க முடியவில்லை’’ என்று கதிர் ஆனந்த்தின் படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ‘ஃபேஸ்புக்’ பதிவு பொதுத் தளத்தில் சர்ச்சையானது. பலர் விமர்சிக்கத் தொடங்கினர்.

நிதி அறிவிப்புக்கான கடிதம்
நிதி அறிவிப்புக்கான கடிதம்

இதையறிந்த கதிர் ஆனந்த், ‘‘அது, என் பதிவு இல்லை. போலி ஃபேஸ்புக் கணக்கு. நான், ரூ.1 கோடியை ஒதுக்கியிருக்கிறேன்’’ என்று விளக்கமளித்தார். மேலும், தன் பெயரிலான போலி ஃபேஸ்புக் கணக்கையும் ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து, ‘இது பொய்யான முகநூல் பக்கச் செய்தி’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகே, சர்ச்சை அடங்கியது.

இதுபற்றி நம்மிடம் பேசிய எம்.பி கதிர் ஆனந்த், ‘‘யார் வேண்டுமானாலும் அந்த தவற்றைப் பண்ணிருக்கலாம். இந்த நேரத்தில் ஒருத்தர் மேல் ஒருத்தர் குறை சொல்வதிற்கில்லை. பேரிடர் போன்ற இந்த நேரத்தில் நல்ல காரியத்துக்காக நிதியைக் கொடுத்துள்ளேன். காவல் துறை மூலம் அந்த போலி ‘ஃபேஸ்புக்’ கணக்கை முடக்கிவிட்டேன்.

ஃபேஸ்புக் போலி கணக்கு
ஃபேஸ்புக் போலி கணக்கு

என்மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் தவறான தகவலை வெளியிட்ட நபர்கள் யாரென்று காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நேரத்தில், மக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து வீடுகளிலிருந்து யாரும் வெளியில் வரவேண்டாம். இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்திவிடலாம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு